பா. சக்திவேல்

Name

Email *

Message *

Saturday 31 December 2016

புதுசு கண்ணா..




புத்தாண்டு ஒன்று
புதிதாய்
பூக்க இருக்கிறது,

வருமாண்டு
வரவாய்
வாரி வழங்க வருகிறது,

தினம் மாண்டு வாழும்
ஏழை நாட்கள்
தித்திக்க திமிருகிறது,

நாடாண்டு
நாடகம் போடுவோர்
நடுநிலை போற்றுவர்,

வீடாண்டு
மனிதம் பேணுவோர்
விபரீதயோகம் காணுவர்,

என்றெல்லாம்
சென்ற ஆண்டு
புத்தாண்டு பலனை பொழிந்தார்
பிரபல நிகழ் கணிப்பாளர் ..

ஆண்டுகள் ஐயாயிராம் ஆனாலும்
அதுவாய் மாறுவது எதுவமன்று .

ஆண்டவன் மாற்றியதை விட
ஆண்டவன் செய்ததே அதிகம் ..

ஆள்பவனை தேர்வு செய்யும்
அடித்தள மக்களே !

இந்த ஆண்டாவது
யோக்கிய  தலைமைகள்
உலக நிலப்பரப்புகளை ஆளட்டும் ..

அதை தேர்வு செய்யும் நல்லறிவை
மக்களுக்கு நல்கட்டும் ..

பொறுமை காத்து, காலத்தின்
கணிப்பில் புரண்டது  போதும் !

பொங்கி வரும் அலைகளே
எதிர்த்த பாறை மோதும்!

துணிந்து  நிற்க முனைந்த பின்
தூக்கம் எதற்கு மனதினில் ..

பணிந்து பார்க்கும் பணியிலும்
அணிந்து செல்வோம் வீரத்தை ..

உழைப்பு  உண்டு உடலினுள்
உறுதி நின்ற நெஞ்சத்துள்
களைப்பு ஏது கண்களில்
கருதி நீரும் பார்த்தீரேல் ..

ஆண்டு சுழற்சி  ஒரு கணக்கு!
அதுவும் நமக்கு நாமாய் சமைத்தது ..

பிரபஞ்ச இயக்க நெறியில் - இந்த
பிஞ்சு அறிவு எதைக்  கண்டது ?
என்ன கணித்தது ?

பால்வெளி  வீதியில்
பல்லாயிரம் பகலவன்கள் ..
நம் பூமி அதில் ஒரு தூசு ..




Wednesday 28 December 2016

அச்சுறுத்தலும் மிச்சமிருத்தலும்

இயற்கை மாபெரும் உணவுச்  சங்கிலியை உருவாக்கி  ஒவ்வொரு உயிருக்கும் உணவாக்கி வைத்திருப்பது அற்புதத்திலும் அதி அற்புதம் . இதில் ஒரு   லட்சத்து  எழுபத்து மூன்றாயிரம் யோனி  பேதங்களுடன் பல கோடி உயிர்கள் பல்வேறு சிறப்புத் தனித்தன்மைகளுடன் வாழ்ந்து வருகின்றன.  இவற்றில் ஒரு உயிரியாக மனிதனும் உருவாகியிருக்கிறான் . 


நாளடைவில் மனிதன் மட்டும் சில தந்திர யுக்திகளாலும் நீண்ட அனுபவங்களின் நினைவு திறன் மேம்பாட்டினாலும் அதிக அளவில் மற்ற உயிர்களின்  சுதந்திரத்திலும் நிம்மதியிலும் கை  வைக்க  ஆரம்பித்தான் . உணவுக்காக பறவை , விலங்கு  வேட்டையை  துவங்கியவன்  நிலையான உணவனுக்காக விவசாயம் செய்கிறேன் என்று சொல்லி காடுகளை அளித்து உணவுச்சங்கிலியில்   அடித்தட்டு  உற்பத்தியாளர்களாக இருந்த  மரம்  செடிகளை ஒடுக்கி  காடுகளை  சுருக்கி  விலை நிலத்தை பெருக்க முனைந்தான். வணிக  நடவடிக்கையாலும் தன்  அடாவடித்தனத்தை மற்ற  உயிர்களின் மீது  அவிழ்த்து  விட்டான் . 
இதை பார்த்து தான் வள்ளுவர் 

" பகுத்துண்டு  பல்லுயிர் ஓம்புதல்  நூலோர் 
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "
என்று  தாம்  இதுவரை ஆய்ந்த  பல்லாயிரம்  நூல்களில்  இதுவே  முதன்மையானதாக சொல்லப்பட்டுள்ளது)  என  உலகிலேயே " பல்லுயிர் தன்மை " (Biodiversity ) குறித்து  முதன் முதலில் பேசினார்.
அடுத்ததாக  நமக்கு முந்தைய தலைமுறையில்  வந்த  பாரதி  " காக்கை குருவி எங்கள் சாதி" என்று  வழி மொழிந்தான் . ஆனால்  இன்று மனிதனின் அதீத ஆசையினாலும்  கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பினாலும்  இமாலய மலை சாரலிலும்  மேற்கு  தொடர்ச்சி மலையினிலும் பல அபூர்வ வகை உயிரினங்கள் ( உலகில் வேறெங்கிலும் இல்லாத) அழிந்து வருவதாக உலகில் அழிந்து வரும் உரினங்களின் பதிவு ஏட்டில்  (red data book) குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதனின் அத்து  மீறலால் வாழ வழியின்றி  மீண்டும்  அதனுடைய  பூர்வீக இருப்பிடத்தை தேடி  விலங்குகள்  வருவதால்  மனித-விலங்கு  மோதல்கள்  அங்கங்கே  அதிகமாகி விட்டது . இதற்கு காரணம் மனிதனின்  அசுர  வளர்ச்சியும்  சகிப்புத்தன்மை குறைபாடும்  வியாபார குறுக்கு புத்தியும் ஆகும் . இவற்றிலிருந்து  ஏனைய உயிர்கள் தப்பித்து  எத்தனை  காலம்  வாழப் போகின்றதோ ? அவைகளுக்கும்  கொஞ்சம் இடம்  கொடுப்போம் .  
                                   







Tuesday 27 December 2016

பாரதத்தின் சாதனையாளர்கள் ( Achievers of India)

பாரதத்தின்  சாதனையாளர்கள் 
பள்ளிப்படிப்பை  பாதியில்  நிறுத்தி  சாதித்து  காட்டியவர்களைத்தான்  இன்று பெரும்பாலான  தன்னம்பிக்கை  பயிற்சி  அளிப்பவர்கள்  முன்னுதாரணமாக காட்டுகின்றனர் . ஆனால்  முறையான  தொழில் நுட்பமோ , அறிவியலோ  அல்லது  கலையோ  பயின்று  சாதித்து தனது  துறையில் தனி த் தடம் பதித்தவர்கள்  பல்லாயிரக்கணக்கானோர் . இவர்களை  எடுத்து காட்டினால்  தான் இளைய தலைமுறைக்கு  நேர்மறை  எண்ணம்  உருவாகும்.

Monday 26 December 2016

மாரடைப்பு மார்க்கம்



மாரடைப்பு மார்க்கம்

மாரடைப்பு  மந்திரம் பல குற்றவாளிகளின் தந்திரங்களில் முக்கிய ஒன்றாக 
பல திரை இலக்கியங்களில் சாட்சியாக காட்டப்பட்டுள்ளது ...

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முயற்சிக்கவில்லை ..

ஆனால் சமீபத்திய தமிழக நிகழ்வுகள் மக்களை கால ஓட்ட கணக்காளர்களாக 
மாற்றிச் செல்கிறது ..

நினைத்த நேரத்தில் அவசர ஊர்தியையும் , மருத்துவரையும் வரவழைப்பது சாத்தியம் எனில் மாரடைப்பை உடலுக்குள் கொண்டு வருவதும் எளிது தானோ ?
எனக்கு தெரியவில்லை அறிந்தவர்கள் சொல்லுங்கள் . 



"திருடனுக்கு  தேள் கொட்டியது  போல " என  சொலவடை உள்ளது . 
தேள்  உருவில்  வந்தது யார் ? நீதி தேவனா ?

நீதி தேவன் வேற்று  உருவில் வருவதாயின் இப்போது உள்ள நவீன திருடர்களுக்கு  சாதரண நச்சு கொண்ட தேளின்  கொடுமை போதுமானதுதானா ?

சுனாமிகள்  இந்த நாட்டின் வளத்தை சுரண்டி  சென்றதை விட  பினாமிகள் எல்லோரையும் வறண்டி  சேர்த்ததுதானே  அதிகமாக தெரிகிறது ...

உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு வியர்வை சிந்துபவர்கள் எல்லோரும் ஏமாளிகளா ? ஏதும்  அறிந்திராத  கோமாளிகளா ? அல்லது வாழ்க்கையை  வாழத் தெரியாத  சாமர்த்தியமற்றவர்களா ?

கொடுங்கோலர்கள்  மக்களை வதைத்ததை  விட, இந்த  நீண்ட கையர்கள் மக்களிடம் அதிகம் கறக்கின்றனரே !

இதையெல்லாம்  இந்த  நாடும் , மக்களும்  எப்படி  சகிக்க  போகிறார்கள் ...

வெண்மையை  கண்டிறாதவர்கள்  பழுப்பையும் வெண்மையென்று  புகழ்வார்களே !

என்னாட்டு இளைஞர்கள்  ஒன்று தனக்கு  பிடித்த  நாயகர்  இவர்  தான்  என சண்டையிடுகின்றனர் , இல்லை பொழுதை வீணே  கழிக்க  நினைக்கின்றனர் .

இந்த மாரடைப்பு மந்திரவாதிகளுக்கு உண்மையில்  மரண அடைப்பு கொடுக்கப்போவது எப்போது ?

குஜராத்திலும் வட  நாட்டிலும் இது  போல நடவடிக்கைகள்   தொடர்ந்தால் தானே  தென்நாட்டு  மக்கள்  இன்னும்  நிறைய மருத்துவ சிகிச்சை  நாடகங்களை காண முடியும் ... ஆமாம் பல  இல்லங்களில்  சுவாரசியம் இல்லாத நாடகத் தொடர்களை  பார்க்கும் பலர், இனி  சமீபத்திய  செய்திகளை காணத் தொடங்குவர் ...










Saturday 24 December 2016

பெற்றவளின் பெருமூச்சு

பெற்றவளின்  பெருமூச்சு 


அன்பும் அரவணைப்பும் காட்டி வளர்த்த அன்னை - வெண்ணை போல உருகுகின்றாள் ...

ஆயிரக்கணக்கான வாய் அமுதூட்டிய நான் அகவை கூட்டிய  போது அருகிலிருக்க ஒரு பிள்ளைக்கும் மனமில்லை ...

வேலை தவறாமல் உணவு சமைத்து உயிரூட்டிய என் பிள்ளைகள்  இன்று அவர்களின் அலுவலக வேலை சுமை என்று சொல்லி என்னை தள்ளி வைக்கின்றனர் . 
கணினிக்கும், சாய்மான இருக்கைக்கும் ஏன் நாய் குட்டிக்கும்  இடமிருக்கும் என் பிள்ளையின் வீட்டில் நான் இருக்க மட்டும் இடமில்லை. ஆமாம் மனதில் இடமிருந்தால் தானே !

இமை மூட மனமின்றி இரவுகளை பகலாக்கி பாலூட்டி முகம் பார்த்த எனக்கு,என் பிள்ளை முகம் காண ஏக்கம் தான் ... தூக்கம் கண்களில் துளியும் இல்லை,என் பிள்ளை பாசத்தின்  தாக்கம் கண்ணீர் துளிகளை இயல்பாக வரவழைத்தது.


மருமகளாய் வந்தவளை கோபிக்க மாட்டேன் .. என் மகனின் முதிர்ச்சியும் பொருளாதார நுட்பமும் எனக்கு அவனது வளர்ச்சி குறித்த மகிழ்ச்சி தந்தாலும் மனதுக்குள் மானுடத்தை பற்றிய அதிர்ச்சி அளித்தது..

அவனுக்கு சாய்ந்தாடும் பொம்மையை கொடுத்து சிறு வயதில் விளையாட சொல்லி இருக்கிறேன் .அதை பரிட்சித்து பார்கிறானோ என்னோவோ .. ஒரு பக்கமாய் .... என்னால் எதற்கு அவர்களுக்குள் ..........?

என்னுள் உருவான பிள்ளை  பெற்றெடுத்த மழலைகளை நான் மடி அமர்த்தி அழகு பார்க்க ஆசையின்  ஓசை மனதுக்குள் அசை போடுகிறது ..இந்த பாவி மனம் ஏனோ அதற்காக  யார் யாரையோ வசை பாடுகிறது ...

தாய்மையின் அர்த்தத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாமல், கண்ணீரும் கவலையும் மட்டும் கனவிலும் தொற்றிக்  கொள்கிறது .....

பெண்ணிற்கு மட்டும் ஏன் இந்த பந்தத்தை  கொடுத்தான் இறைவன் - தீ பந்தத்தை சூழ்ந்திடும் பூச்சிகள் போல பிறவிகள்   எடுத்தாலும் நான் மட்டும் ஏன் திரியாய்  கருகி தீபமாய் எரிகிறேன் ....

அவர் மனதை கல்லாக்கிக் கொண்டார் - தேவைக்கு  மட்டும் தேடி வரும் பிள்ளை என ...என்னால் தான் இயலவில்லை .. என்ன செய்வது ..

ஏதோ பரிணாம வளர்ச்சி என்கிறார்களே ? என் மருமகளையாவது புண்ணியவாதியாக்கட்டும், அவளுக்கும் சிறு பிள்ளைகள் இருக்கிறார்களே ..அவர்கள் வளர்வதுக்குள் ஏதும் மாற்றம் நிகழாதா?



என்  உயிர் எப்படியோ  போய்  விடும் .... இறைவா இதற்காக அவர்களை தண்டித்து விடாதே ....அவன் சிறு குழந்தை , ஏதும் அறியாதவன் ..


Friday 23 December 2016

கணினித் தமிழ்ச் சங்க ஆண்டுவிழா


கணினித் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்ற அடியேனுக்கும் வாய்ப்பு வழங்கிய ஐயா முத்து நிலவன் உள்ளிட்ட அனைத்து தமிழ் அறிஞர்களுக்கும் நன்றி . 

Thursday 22 December 2016

தீப ஒளி

                                                                  தீப ஒளி

மேலும் தொடர கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும் ...
https://drive.google.com/file/d/0B0VECZKYc_LhblQyczJkY1dLWFk/view?usp=sharing

பாரதி என்னும் அதிர்வலை


பாரதி  என்னும் அதிர்வலை  - தொடர்ந்து படிக்க கீழே சொடுக்கவும் .....

https://drive.google.com/file/d/0B0VECZKYc_LheHlGWEtmMU9hS0k/view?usp=sharing

வாய்மை இந்தியா







தொடர்ந்து வாசிக்க
கீழே உள்ள தொடர்பை சொடுக்கவும் வாய்மை இந்தியா
https://drive.google.com/file/d/0B0VECZKYc_LhTUdOdnQ3WDliNWM/view?usp=sharing

Monday 5 September 2016

எழுத்தறிவித்தவன் இறைவன்

எழுத்தறிவித்தவன் இறைவன்
வனத்தில் பழங்கள் பல்லுயிர்க்கும் உணவாவதோடு செறிவுள்ள தன் புதிய இனத்தை விதை மூலம் பரவச் செய்கிறது. காந்தம் தன்னோடு சேர்ந்த இரும்புத் துண்டையும் காந்தமாக்கல் போல, அகிலம் தோன்றிய முதல் ஒளி வீசும் பகலவன் படுகதிர் பட்ட பொருளும் பிரகாசிப்பது போல, குணமிலோரும் முறையான குருவை பெறுவாராயின் குவளயம் போற்றுவோராய் உயர்வர். அதனால்தான் ஒளவையார்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குச்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு  (மூதுரை)
என கற்றோர்களை பெரிதான இடத்தில் வைத்தார். புவிச்சக்கரவர்த்தியை விட கவிச்சக்கரவர்த்தியே உயர்ந்தோர் என புகழ்ந்தார். வள்ளுவரும் ஒரு படி மேற்சென்று
“கற்றாருள் கற்றார் எனப்படுவார் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்”
படித்தவருள்ளெல்லாம் படித்தவர் என்பவர் கற்றோர் கூடியுள்ள அரங்கில் செல்லும்படியாகவும் , சொல்லும் படியாகவும் தான் கற்றவற்றை எடுத்துரைக்க வல்லோர் என இலக்கணம் கூறினார். குருவில்லாமல் பெறும் ஞானம் உருவில்லாமல் உலவும் உயிருக்கு சமானம். அது துடுப்பில்லாமல் துவண்டு நிற்கும் மரக்கலம் போல செயலின்றி நிற்கும்.
உலகத்தையே வென்றவன் எனப் புகழப் பெற்ற அலெக்ஸாண்டர் தன் முழு பக்தியையும் தனது ஆசிரியருக்கே செலுத்தினான். அவர்தான் உலகிலேயே மிகவும் வசதியான சீடரைக் கொண்ட குரு அரிஸ்டாட்டில். ஒரு நாள் காட்டு வழியில்- குரு காட்டும் வழியில் அவரோடு பேசிக் கொண்டே அலெக்ஸாண்டர் சென்று கொண்டிருந்தார். அதுவரை குருவைப் பின் தொடர்ந்து சென்றவர் சிறிது தூரத்தில் ஒரு காட்டாறு குறுக்கிடுவதைக் கண்டு சட்டென குருவை முந்திக் கொண்டு சென்று ஆற்றில் இறங்கி சிறிது தூரம் கடந்து பின்பு குருவை ஆற்றில் இறங்க சொன்னார்.
குருவிற்கு சந்தேகம் - ஏனப்பா என் பின்னால் வந்த நீ வேகமாக சென்று நீரில் இறங்கினாய் என்றார். அதற்கு அலெக்ஸாண்டர் இந்த காட்டாற்றில் எப்போது வேண்டுமானாலும் நீர் மட்டம் உயரலாம். ஒரு வேளை அப்படி ஏதேனும் நிகழ்ந்து நான் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனால் பரவாயில்லை. ஏனெனில் நீங்கள் நினைத்தால் எத்தனை அலெக்ஸாண்டரை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் நூறு அலெக்ஸாண்டர் சேர்ந்து முயன்றாலும் உங்களைப் போன்ற ஒரு அரிஸ்டாட்டிலை உருவாக்க முடியாது என்றார்.
மாவீரன் நெப்போலியனைப் பார்த்து நீ யாரால் உருவாக்கப்பட்டவன் என கேட்ட போது நான் ஒரு ஆசிரியரால் உருவாக்கப்பட்டவன் என்றாராம்.
சோர்ந்து நின்ற இளைஞர்களை சேர்ந்து நின்று வீறு கொண்டு எழ வைத்த இளைஞர்களின் எழுச்சி நாயகர் அப்துல் கலாம், தான் அதிபராக இருந்த போதும் தன் ஆசியரைத் தேடிச் சென்று வணங்கினார்.
                         உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்”
என கல்வி கற்போர் கட்டுக்கடங்கா சொத்துக்களுக்கு அதிபதி ஆனாலும் பணிந்து கற்க வேண்டும் என்பார் வாய்மொழிப் புலவர். சர்வப்பிள்ளையில் சாதா கிருஷ்ணன் ஆசிரியராக இருந்தவர்,; ஜனாதிபதி ராதாகிருஷ்ணனாக உயர்ந்ததன் பெருமையை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

மாணவர்களும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையையும் வழங்க வேண்டும். மாதா பிதாவுக்கு பிறகு சதா நாளும் நம் மீது அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் அவர்களே! இன்றைய மாணவர்களில் சிலர் ஆசிரியர்களை பெரும்பாலும் ஓர் ஊழியனாக பார்க்கும் மனநிலை வளர்ந்து வருகிறது. ஏனெனில் நாம் தான் பல ஆயிரங்களை கட்டணமாக செலுத்துகிறோமே என்பதாலா?
நீதியையும், நெறியையும் , பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், நுண்ணறிவையும், சகிப்புத் தன்மையையும், வீரத்தையும், வெற்றியையும் கலைகளோடும் நுட்பத்தோடும் இணைத்து போதித்தது அன்றைய கல்வி முறை. ஆனால் இன்றைய மெக்காலே கல்வித் திட்டத்தில் பயன் சிலருக்கு இருப்பினும் மாணவர்களை தேர்விற்கு தயார் செய்யும் ஒரு முயற்சி மட்டுமே அதிகமாக முன்னெடுக்கப் படுகிறது. ஏனெனில் இதற்குத்தான் இன்றைக்கு மதிப்பெண்களும் முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் கடும் போட்டியை ஏற்படுத்திக் கொண்டு பெற்றோர்களின் கூட்டு முயற்சியோடு மாணவர்களை மனநெறுக்கடிக்கு ஆளாக்குவதையே அதிகம் விளைவிக்கிறது.
உண்மைக் கல்வி அதுவல்ல என்பதை புரிந்து கொண்ட கல்வியாளர்களும் , மக்களும், அரசும் இணைந்து திறமான கல்வியை படைக்க முன்வர வேண்டும்.

தற்காலத்தில் சில கல்வி நிறுவனங்கள்- வங்கிளில் சேமிப்பை உயர்த்த வாடிக்கையாளர் சேவை புரிவதைப் போல, மாணவர்கள் பெற்றோர்கள் கவனத்தை ஈர்க்க வாடிக்கையாளர் சேவை புரிந்து வருகின்றன.
ஏனைய தொழில் புரிந்து வருவாய் ஈட்டுவதற்கும் ஆசிரியராக பணியாற்றுவதற்கும் உள்ள அடர்த்தியான வேறுபாட்டை ஆசிரியர்கள் நன்கு உணர்ந்திருப்பர். ஆசிரியர்- மாணவ உறவு மற்றும் புரிதல் புனிதமான ஞானமார்க்கத்திலானது. இது ஆண்-பெண் பாலினம் கடந்து, ஏழை – பணக்கார ஏற்றத் தாழ்வு துறந்து, சாதி- மத வேறுபாடுகள் மறந்து நிர்மலமான அன்பும் கருணையும் தொலை நோக்கும் கொண்டு பார்க்கப்பட வேண்டியது. ஆசிரியராக பணியாற்றுவோர் அதற்குரிய பொறுப்பும் பொறுமையும் கொண்டு பணியாற்றினால்தான் அதிகமான மாணவர்களால் மதிக்கப்படுவர் என்பதறிந்து தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். எதிர்கால சமூகம் ஏற்றம் நிறைந்ததாக மாற்றம் பெற பங்காற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசியருக்கும் உண்டு என்பதை யாராலும் மறக்க முடியாது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு ஆசிரியனிடம் கல்வி பயின்றவனாகவே இருக்கின்றனர்.
உயர்ந்த இடத்தை அடைந்த மாணவர்களுக்காக உரிமை கொண்டாடும் ஆசிரியர்கள்: பல மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்னும் கீழ் நிலையில் இருப்பதற்கும் , உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன் தாழ்நிலையில் உள்ளதற்கும், கல்லூரியில் படித்த இளைஞர்களில் சிலர் - கள் ஊறும் சாலைகளில் சுவைத்து நிற்பதற்கும் சமூகத்தோடு சேர்ந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். நல்ல ஆசிரியர்களும் நடமாடும் தெய்வங்களாக பெற்றோர்களும் இருந்துவிட்டால் நாளைய உலகம் அன்பும் அறிவும் பெற்று ஆக்கமும் அமைதியுமுற்று பண்பும் பரிவும் படைத்து பெருமை கொண்டு புகழ் பேசும். அன்று காவல்துறை உயர் அதிகாரிகளும், சட்ட வல்லுனர்களும் கூட ஆசியராக மாறிவிடுவர் குற்றங்களே இல்லை என்பதால்…..

Friday 13 May 2016



என் கல்வி என் உரிமை திட்டத்தின் கீழ் 25% மாணவர் சேர்கைக்கு
அரசாங்கம்  ஆணை பிறப்பித்துள்ளது . ஒவ்வொரு தனியார்  மெட்ரிக் பள்ளிகளும் இதை அமுல் படுத்த வேண்டும் .

பெற்றோர்களின் பார்வைக்காக அரசு ஆணையின் தொடர்பு பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
G.O. Ms.No. 60 School Education (X2) department dated 1.4.2013
இயந்திர பொறியியல் துறை மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் நிகழ்ச்சியாக 11.5.2016 அன்று துறை தலைவர் திரு மோகன் அவர்களின் அழைப்பின் பேரில் "முடிவெடு முடித்துவிடு " என்ற தலைப்பில் உரை ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது .

இயந்திர  நுட்பம் பயில்வோரின் இதயம் வெறும் இயந்திரமில்லை எனும்படி பேராசிரிய நண்பர்களும் மாணவச் செல்வங்களும் உபசரிப்பாலும் , அன்பாலும் எனது நெஞ்சத்தை நிறைத்தார்கள் .
நன்றி.


Thursday 12 May 2016


சாமானிய மக்களாய் இருந்த போது
யாரும் கண்டு கொள்ள வில்லை .

வாக்காள பெருமக்களாக ஆன போது
வாய் நிறைய அழைக்கிறார்கள் .....
வாயில் நுழைந்து வணங்குகிறார்கள் ..
கரம் குவித்து நிற்கிறார்கள் .....
கரம் பற்றி சிரிக்கிறார்கள் ...

திறம் கெட்ட தீ வெட்டிகள் ..
புறம் காட்டி செல்கிறார்கள் ...

உங்கள் வீட்டு பிள்ளை என்பார்கள் ,
சொன்னதை செய்யும் கிள்ளை என்பார்கள் ,
வெற்றியே எல்லை என்பார்கள் ,
வீணாய் பல தொல்லை செய்வார்கள் .
திசை மாறிய தலைவர்கள் 


கால் கடுக்க வரிசையில் நின்று
கடவுளை காண கட்டண தரிசனம் ,

உற்சவ காலங்களில் இலவசமாய் கிடைக்கும்
வீதி உலா தரிசனம் .

காத்து கிடந்து
மனு கொடுக்க மன்றாடியது
அப்போது !

தானே வெளிவந்து
தப்பாட்டதோடு மக்களை காண்பது
இப்போது !

Wednesday 11 May 2016

மழை காலங்களில் 
தவளைகளின் ஆரவாரம் போல 
தேர்தல் களங்களில் 
வேட்பாளர்களின் வீரா வேசம் .

ஐந்து ஆண்டுகளுக்கு
ஓய்வும் உறக்கமுமாய் இருந்து ,
ஒரு முறை சுறுசுறுப்பாய் இயங்குகின்றனர் .

ஐந்து ஆண்டுகள் போராடி கண்கலங்கி 
ஒரு நாளில் (தேர்தல் நாள்)ஓய்வு எடுத்து விடாதீர் .
வாக்களிப்பர் !
வாய்க்கரிசி (கையூட்டு)வாங்காமல் வாக்களிப்பர் !

விடுதி மாணவர்களுக்கான வழி காட்டி நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு வழங்கப் பட்டது . அடியேன் விடுதிக்கான வரையறையில் தொடங்கி இன்றைய மாணவர்களின் மன அறை வரை புதிரான வயதுக்கு எதிரான கருத்துரைக்காமல் உதிராத மலர் போல கொஞ்சம் உறவாலே பேசி ,அன்பாலே யோசி என்று என் பாணியில் எடுத்துரைத்தேன் . மாணவர்கள் கர ஒலியோடு ஏற்று கொண்டனர் என்று தன்னிறைவோடு ஒன்றரை மணி நேரம் பேசி விட்டு வீடு திரும்பினேன் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை விடுதி காப்பாளர் ,நண்பர் ராமச்சந்திரன் சிறப்புற செய்திருந்தார் . வாய்ப்பு வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கும் , முதல்வருக்கும் நன்றி .

நாள் 5-5-2016

Thursday 5 May 2016

ரேசன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச மொபைல் போன் - நல்ல யோசனை .
ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு எங்களிடம் சில போன்கள் , பல சிம் கார்டுகள் இருக்கிறது . பேசுவதற்கு ரூபாய் தான் தேவை படுகிறது . எனவே மாதா மாதம் 20 கிலோ இலவச அரிசி மாதிரி 200 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் செய்தால்  ரொம்ப உதவியா  இருக்கும். 

Sunday 24 January 2016

ஹைக்கூ

எதைஎதையோ கசக்கி வாய்க்குள் போடுகிறாய்,
என்னையும் ஒரு முறை கசக்கி போடேன் 
ஜீன்ஸ் ........

Tuesday 19 January 2016

பொங்கல் விழா

இந்த ஆண்டு திருவள்ளுவர்  தினத்தன்று நல்லதொரு நிகழ்வில் கலந்து   கொள்ளும் வாய்ப்பு   கிடைத்தது .கி பி 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த மேடையில் உரை  ஆற்றினேன் .  அதன் பிறகு என் கல்லூரி  காலங்கள் வரை (கி பி 2005 ) பல்வேறு  இலக்கிய நிகழ்சிகளில் முத்தமிழ் பேரவையில் கலந்து கொண்டிருக்கிறேன் .
10  ஆண்டுகள் கழித்து நண்பர் கவிஞர் கிருஷ்ண குமாரிடமிருந்து அழைப்பு .
வள்ளுவன் - பாரதி -கலாம்  இவர்களின் கனவுகள் இந்தியாவில் ஊற்று நீராய் நிறைகிறதா ? கானல் நீராய் மறைகிறதா ? என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு பூண்டி கல்லூரியின் முன்னால் முதல்வர் முனைவர்       உரு .ராஜேந்திரன் நடுவராக பொறுப்பேற்று செவ்வனே செய்தார் .
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் செக .மகேசன் அவர்கள் என்னுடைய நேர்மறை அணிக்கு தலைமை ஏற்று  வாதிட்டார் . அடியேனுக்கு வழங்கப்பட்ட 25 மணி துளிகளில் சொந்த ஊர் மக்களின் முன்  தெம்போடு ,சொந்த மண்ணில் விளையாடும் கிரிக்கெட் வீரரை போல துணிந்து ஆடினேன் . அதற்கு முன்னர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா . மகாலிங்கம் அவர்களின் தமிழ் பற்று என்ற தலைப்பில் ,புலவர் ,குடவாசல் திரு. ராமமுர்த்தி அவர்கள் சொற் பொழிவு ஆற்றினார் .

Wednesday 13 January 2016

பொங்கட்டும் ............





அன்பு செழித்து -
நேயம் கொழித்து ,
உண்மைகள்  உறைந்து -
நன்மைகள் நிறைந்து, 
பண்பு படர்ந்து -
நட்பு நிகழ்ந்து ,
உழைப்பை உணர்ந்து -
உணர்வால் நெகிழ்ந்து
உள்ளங்கள் விரிந்து -
இல்லங்கள் சிறந்து ,
கசந்த வாழ்வு -
வசந்த வாழ்வாய் ,
பொங்கிட ,
புது நம்பிக்கை தங்கிட, 
பொன்னான வாழ்த்துகள் !

 

Saturday 9 January 2016

பொங்கல் பரிசு

தமிழக அரசு நம் மக்களின் அடையாளமாக  கொண்டாடப்படும் தை திருநாளின் வருகையை வரவேற்க நூறு ரூபாயும் , அரிசியும், இரண்டு அடி  கரும்பு துண்டுகளையும் வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .



ஆனால் தன்  மானத்தையும் , உழைப்பின் வெகுமதியையும் உணர்த்தும் முகமாக அறியப்படும் பொங்கல் விழாவினை தன் சொந்த உழைப்பால் ஈட்டப்பட்ட ஊதியத்தால் கொண்டாடப்படாமல்  இன்னும்  இலவசம் வாங்கி தான் கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு இருக்கின்ற  மக்களின் இயலாமையை , அவர்களின் இந்த நிலைக்கு பின்னணயில் இருக்கும் அரசியல் தந்திரத்தையும் நினைக்கும் போது மிகுந்த வருத்தமாக உள்ளது . நான் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்தவன் அல்ல என்பதனால் பொது மக்களில் ஒருவனாகவே  இதை காண்கிறேன் .
உண்மையில் பொங்கல் பரிசாக மக்கள் எவ்வளவோ எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள் .
1. இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பை வெறும் அறிவிப்பாக இல்லாமல் நிஜமான  பலன் கிடைக்கும் தொழில் ஆதாரமாக ,
2. நசித்து வரும் சிறு தொழில்களை காக்க , நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை  உலக தரத்திற்கு  கொண்டு செல்லும் தொழில் நுட்ப உதவியாக ,
3.வெறிச்சோடி கிடக்கும் விவசாயத்திற்கு  தன்னம்பிக்கை அளிக்க , உற்பத்தியாகும் பொருள்களை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய , நீராதாரங்களை காக்க ,
4. பல லட்ச கல்வி கட்டணங்களை வசூலித்து கல்வி கண் திறக்கும் கல்வி வள்ளல்களிடமிருந்து மாணவர்களையும் , பெற்றோர்களையும் காத்து அரசின் நேரடி உதவி - உதவி தொகையாக இல்லாமல் , தரமான கல்வி நிலையங்களாக நிலை பெற ,
5. ஒரு  நாளைக்கு சராசரியாக 200 ரூபாய்க்கு குடிக்கும் தமிழக மக்களை காத்து அவர்களின் குடும்ப பொருளாதாரத்தை பேணி , கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு சேமமுரச் செய்ய ,
6. லட்ச  கணக்கில் மருத்துவ கட்டணம் வசூல் செய்யும் வசூல் ராஜா மருத்துவ மையங்களில் இருந்து மக்களை மீட்டு , தரமான மருத்துவ சிகிச்சை நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்க செய்ய ,
இன்னும் எத்தனையோ நல திட்டங்களை  எதிர் பார்த்து மக்கள் காத்திருகின்றனர் . இவைகளில் எவையெல்லாம் நடை பெறுகிறதோ  அன்று  உண்மையில் பொங்கல் கன்னல் சாராய் இனிக்கும் .

பல்லுயிர் தன்மை

Image result for jallikattu
ஜல்லிக்கட்டு  நடத்த அனுமதி அளித்து  சமீபத்தில் வெளியான செய்தி ஒரு சாரார்க்கு மகிழ்ச்சியாகவும் விலங்கின  ஆர்வலர்களுக்கு புருவத்தை உயர்த்துவதாகவும் உள்ளது. இது பண்டைய கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக மார் தட்டிக் கொள்ளும் நாம் , வீரத்தின் வெளிப்பாடாக விளம்புகிறோம் . ஐரோப்பிய நாடுகளிலும் இது போல் காளை உடன் மோதும் விளையாட்டு உள்ளது . அதில் ஒரு வீரர் மட்டுமே ஒரு சமயத்தில் மோதுகிறார் . துரதிர்ஷ்டமாக இறுதியில் அந்த காளை கொன்று வீழ்த்தப்  படுகிறது . இதற்கு நேர்மாறாக தமிழகத்தில் நடை பெரும் போட்டிகளில்  காளைகளுக்கு வெறி ஏற்றி வெளியேற்றப்பட்டபின் கூட்டமான இளைஞர்கள் அதை  நோக்கி  மிரட்டும்  வண்ணம் ஓடுகின்றார்கள் . எவர் ஒருவர்  அதன் திமிலை பிடித்து தொங்கி கொண்டு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு செல்கிறார்களோ  அவரே வென்றார்  என அறிவிக்கப்படுகிறது . இதில் தனிப்பட்ட நபரின் வீரம் வெளிப்படுத்த மேற்கொண்ட முயற்சியின் போது வேடிக்கை பார்க்கும் அப்பாவி மக்களே  பலர் மிதியுண்டும் கொம்பால் குத்தப் பட்டும் பரிதாப நிலைக்கு  செல்கின்றார்கள் . என்னுடைய  வேண்டுகோள் இது தான் : போட்டியில் ஈடுபட விரும்புவோர்கள் ஒருவர் பின் ஒருவராக பாது காப்பு வளையத்துக்குள் வந்து தனியாக காளையை , திரைப்படத்தில் எதிர் கொள்வது போல எதிர்க்க  வேண்டும் . அப்போதுதான்  தனிப்பட்டஆண்மகனின் வீரம் ஆராதிக்கப்படும் .


மேலும் விலங்கு நல ஆர்வலர்களுக்கு ஒரு விண்ணப்பம் . காளைகள் , எருதுகள் என்ற பெயரில் காலம் காலமாக உழவனின் தேவைகளுக்கும் , போக்குவரத்திற்கும் பயன் படுத்தப்  பட்டு வந்துள்ளது. ஆனால்  காடுகளில் கம்பீரமாக திரிந்து வனத்தை வளப் படுத்தி வந்த யானைகளை பிடித்து வந்து ஆலயங்களின் முன் நிற்க வைத்து ஐந்துக்கும் பத்துக்கும் காணிக்கை  என்ற பெயரில் பிச்சை எடுக்க வைத்து , இப்போது  நிலத்தில் வாழும் உயிரிலே மிக பெரிய தோற்றத்தை உடைய களிறுகளை காலில்  சங்கலி போட்டு கட்டி வைத்து கால் கடுக்க நிற்க வைத்து விட்டு , ஆண்டிற்கு ஒரு முறை அவைகளை கொண்டு யாகங்கள் நடத்தி புத்துணர்ச்சி முகாம் என்ற பெயரில் ஒரு சிகிச்சை அளிப்பது  நியாயமா ? அவைகளை சுதந்திரமாக காட்டில் நடமாட வைக்க வழி காணுங்கள் . காடுகளின் ஆக்கிரமிப்பில் இறங்கியுள்ள அந்நியாயகாரர்களின் அத்து மீறல்களிலிருந்து  அவைகளுக்கு நல வாழ்வு தாருங்கள் . பல்லுயிர்  தன்மை குறித்து உலகத்திலேயே முதன் முதலில் பேசியவர் வள்ளுவர் தான் . அதிலும்  அவர்  பல  நூல்களை  கற்று ஆய்வு செய்ததில் முதன்மையானதாக சொல்கிறார் .
"பகுத்துண்டு  பல்லுயிர்  ஓம்புதல்  நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "

Friday 8 January 2016

பேராசிரியர் , அறிவியலாளர்,
இலக்கியம் , ஆன்மிகம் ,  தன்னம்பிக்கை  சொற்பொழிவாளர்.
பட்டிமன்ற பேச்சாளர்.

"இறை
பாத கமலங்களை  தொழுவோர்
பாதக மலங்களில் இருந்து எழுவோர் "

தொடர்புக்கு


பா .சக்திவேல் ,

உதவிப் பேராசிரியர் ,

மின்னணு  மற்றும் தகவல் தொடர்புப்  பொறியியல் துறை ,

மௌண்ட்  சீயோன்  பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்  கல்லூரி, 

புதுக்கோட்டை .
தமிழ்நாடு 


மின்னஞ்சல் : sakthi1807@gmail.com

அலை பேசி : +91 9952806070