பா . சக்திவேல்

Name

Email *

Message *

Tuesday, 1 August 2017

எப்படித் தீர்ப்பது ?
மீன் பிடிக்க விரித்த வலையில் நத்தைகள் மாட்டிக் கொள்கின்றன.

எலிக்கு வைத்த  மின்வேலியில் சிக்கி  யானைகள் இறந்து  போகின்றன ..

லஞ்சம் வாங்குவோரை பிடிக்க சிறப்பு சட்டம் , சிறப்பு காவலர் , சிறப்பு நீதி மன்றம் என எல்லாம் இருந்தும் ஒரு அலுவலகத்தில் லஞ்சமே வாங்க மாட்டேன் என்று வைராக்கியமாய் இருப்பவரை லஞ்சம் பெறும் அத்தனை ஊழியர்களும் சேர்ந்து அவருக்கு தெரியாமல் சூழ்ச்சி செய்து லஞ்ச ஊழல் புகாரில் சிறப்பாக சிக்க வைக்கின்றனர் ......ஏழைகளுக்கு இலவசம் , உதவிகள் என்று சொன்னால் சுயமாக நிற்கும் தெம்பு இருப்போரும், நாங்களும் ஏழைகள் தான்  என்று இறங்கி வந்து வரிசையில் நிற்கின்றனர் .......

வருமானத்தை வைத்து வரம்புகளை வகுத்தாலும் அதிகாரியை அரவணைத்து குறைத்து காட்டி குனிந்து கொள்கின்றனர் ....

நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு உதவி இல்லை என்ற உடன்  நான்கு நான்கு சக்கர வாகனங்களின் மொத்த மதிப்பில் ஒருவர் வாங்கி வைத்திருக்கும் அயல் நாட்டு இரண்டு சக்கர வாகன வைத்திருப்பவரை காட்டி , இவர் என்ன குறைந்தவரா என கேட்கின்றனர் ......

மூன்று அறைகள் இருக்கும் வீடு வைத்திருந்தால் எதுவும் இல்லை என்றால் , மூன்று அரை கண்டிப்பாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் என்கின்றனர் .... அதுதான் சமையலறை , படுக்கை அறை , கழிவறை  இது போக சிலரிடம் பூஜையறை ..... இவர்களை என்ன செய்ய போகிறீர்கள் ......

விலை வாசிகளை அலை பேசிகளின் மாதிரி போல வெகுவாக உயர்த்துறீர்கள் ... ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் வாங்கினால் என பெரிய மிச்சமா   என சிலர் அங்கலாய்க்கின்றனர்......

வருமான வரி கட்டினால் உதவிகள் இல்லை .... வரியே  கட்டாமல் கல்வி , மருத்துவ  கொள்ளைக்கு என்ன செய்ய போகிறீர்கள் ? கோடியில் தொழில் செய்து நஷ்ட கணக்கு காட்டுவோரெல்லாம் எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்று சிலர் கேள்வி .............

குளிர் சாதன வசதி இருந்தால் இலவசங்கள் இல்லை என்றால் ஏழைகள் இனி அவ்வசதியை பெறுவதற்கு அஞ்சுவர் . உங்கள் திட்டம் அவர்களின் வளர்ச்சியை தலையில் தட்டும் ....

5 ஏக்கர் நிலம் இருக்கிறது , விவசாயம் செய்ய நீரின்றி எப்படி சாகுபடி செய்வது ? இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா ? ஊருக்கு  சோறிடும் உழவன் வரிசையில் நின்று இலவச அரிசி வாங்கும் படி செய்தது யார் ? விவசாய மேம்பாட்டிற்கு , அவர்களின் விளைச்சல் பொருள்களை சர்வதேச தரத்தில்  சந்தை படுத்துவதற்கு  என்னென்ன முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ளது ? உற்பத்தி பொருள்களை சேமித்து உரிய விலைக்கு விற்பனை செய்ய என்னென்ன முயற்சிகள் எடுத்துள்ளது ? கேள்விகள்  நீளும்....


சமையல் எரிவாயுவிற்கு அனைவரையும் மாற வைத்து மானியம் அளித்து  பின்பு பின் வாங்கியது கார்பொரேட் முதலாளிகளின் வணிக யுக்தி .... பலி கடா ஆனது மக்கள் , பலி வாங்கியது அரசியல் பூசாரிகள் .......

உண்மையில் இலவசம் , சலுகை என்றால் இருந்தவருக்கு ஒரு ஏக்கம் வரத்தான் செய்கிறது ....
பல நூறு பட்டு வேட்டிகளும் புடவைகளும் அலமாரியில் உறங்குகின்ற போதும் சிலர்க்கு அரசாங்கம் கொடுக்கின்ற நார் துணிகளை விட்டு கொடுக்க மனம் இல்லை .......

பள்ளத்தில் விரைந்த வெள்ளத்தில் சிக்கி மடிந்த மனிதர்களுக்கு நிவாரணம் அளித்தால் உள்ளத்தில் வருந்தி உள்ளதில் சிறந்த இல்லம் வைத்திருப்போரும் கையேந்தும் கீழ் நிலை தொடர்கிறது .....  

Sunday, 23 July 2017

பூசாரிக்கு மனமில்லை ....

"சாமி வரம் கொடுத்தும் பூசாரி வழங்க மறுக்கிறார் "
இது பல நிலைகளில் அன்றாடம் பயன் படுத்தும் பழமொழி .

 மன்னரைப்  புகழ்ந்து பாடி பரிசுகளைப் பெறுவது அன்று தொட்டு இன்று வரை புலவர்களின் அடிப்படை செயல்களாக இருந்து வருகிறது . இந்த எழுதப்படாத முறைக்கு ஏற்ப ஒரு புலவர் , தனது நாட்டை ஆளும் மன்னரை சந்தித்துப் பாடி போற்றுவதற்காக அரசவைக்கு வருகை தர இருந்தார். இந்த செய்தியை அறிந்த மன்னரும் புலவரை தக்க முறையில் கௌரவிக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சருக்கு உத்தரவு இட்டார். ஆனால் அமைச்சர் பெருமானுக்கு இதில் விருப்பமில்லை . நம் ஊரில் வாழும் புலவருக்கு இவ்வளவு மரியாதைகளா ? நாம் இப்படியே இதை விட்டு விட்டால் புலவர் என்று சொல்லி வந்து, பலரும் பரிசுபெற்று செல்வார்கள் . நம்முடைய நிலை என்னாவது என்று யோசித்து, இந்த புலவரை ஏளனமாக அலட்சியம் செய்ய நினைத்தார்.
 மறுநாள் காலை சபைக்கு வந்தார் புலவர் . தன்னுடைய இயல்பான கவிச்சுவையால் சரம் சரமாக பாக்களை பொழிந்தார், மன்னர் மகிழ்ந்தார் . அவரை பெருமை படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த பட்டு ஆடையை போர்த்தினார். இந்த புலவருக்கு கிழிந்த ஆடை போதும் என்று அவமதிக்க காத்திருந்த அமைச்சரின் கீழ்தரமான எண்ணத்தால், தாம் அறியாது ஓரத்தில் கிழிந்த ஆடையை அளித்தார். அதன் மேல் செய்யப்பட்டிருந்த பூவேலைப்பாடுகளில் இருந்த இயற்கை ரசனையை வருணித்தார். புலவரே ! இதோ பாருங்கள் ..... இதில் பூ   உள்ளது , காய் உள்ளது , கனி உள்ளது என்றார் . உடனே அமைச்சரின் குறை புத்தியை நாகரிகமாக எடுத்து காட்ட எண்ணிய புலவர் , அரசே ! பிஞ்சும் உள்ளது  என்றார். புரிந்து கொண்டார்  மன்னர். புலவருக்கு வேறு ஒரு நல்லாடையை அளித்து , பரிசும் அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார் . அமைச்சரை அழைத்து பின் வசை பாடினார் . இந்த கதையை பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேடைகளில் கூறி வருகின்றனர்.........
       இது இன்றும் பல அரசு அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் தொடர்ந்து நடை பெற்று வருவதுதான்..... தலைமைக்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் பல  பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் , பலன்கள் , ஏன் ஊதிய உயர்வு  இவை எல்லாவற்றிலும் தன்னுடைய மட்டமான புத்தியை காட்டி அவர்கள் வயிற்றில் அடிக்க நினைப்பவர்கள் பலர் .
புதிதாக பணிக்கு வந்து சேர்பவர்களை அடி  மாட்டு விலைக்கு பேரம் பேசி அதன் மூலம் தன்னுடய எதேச்சதிகாரத்தை தன்னுடைய அலுவலகத்தில் காட்ட நினைக்கும் உயரதிகாரிகளும் உண்டு ......
   தனக்குக்  கீழ் பணியாற்றுபவர்களை புண் படும் வார்த்தைகளால் நோகடித்து அதன் மூலம் தான் பெரிய நிர்வாகி என்று காட்டிக் கொள்வோரும் இருக்கிறார்கள். இந்த  மாதிரியான பூசாரிகளின் வாழ்க்கையும், பார்ப்பதற்கு -பல பேர் வாழ்க்கையில் உடுக்கை அடிப்பதை போன்று இருந்தாலும், இறைவனுக்கு  முன் இவர்களும் ஒரு நாள் பலியாகப்  போகிறவர்களே .......

  நவீன அலுவலர்களுக்காக  ஒரு நகைச்சுவையை ஒரு மாத இதழில் படித்தது நினைவுக்கு வருகிறது ....
                                                உயர்  அதிகாரி சொன்ன, 
                                                முட்டாள் தனமான 
                                                ஜோக்கிற்கு சிரிப்பவன் 
                                                 புத்திசாலி !


Thursday, 20 July 2017

சைவ சித்தாந்த நன்னெறி (Saiva sithantha Nanneri)

சைவ சித்தாந்த நன்னெறி - நூல் அறிமுகம் 
ஆசிரியர் :  சித்தாந்த செம்மணி , சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன் 


வெளியீடு : மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை , 
                         அம்மாபேட்டை ,    தஞ்சாவூர். 

கிடைக்குமிடம் : 
எனது பார்வையில் .....

              இந்த நூலைப்  படைத்திருக்கும் சைவத் திரு .சௌரிராஜன் அவர்கள், அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். உறைப்பான ஆன்மீகப் பற்றினாலும், தொண்டாலும் வாழ்வின் பெரும் பகுதியை இறைப்  பணிக்காக ஒதுக்கி வைத்தவர் .  ஆசிரியப்பணி  ஓய்விற்குப் பிறகு, முழுநேர இறைத்  தொண்டில் நிறைவு கண்டு வருபவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ சித்தாந்த பேராசிரியராக பணி செய்து வருபவர்.  திருவாசகம் முற்றோதல் மூலம் தமிழகம் அறிந்த       சிவ நேயர் . 

                         சைவ சித்தாந்தத்தின் ஒவ்வொரு பகுதியையும் முழுமையான ஆய்வு செய்து, எளிய நடைமுறை உதாரணங்கள் வழியாக, அரிய தத்துவங்களை, தொடர்ந்து தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் சிறப்பாக செய்து வருபவர். பதினான்கு சாத்திரங்களின் விரிவுரையை சுமார் 250 மணி நேரங்களுக்கு மேல் வழங்கியுள்ளார். அவை குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன.  யூ -ட்யூப் லும் பதிவேற்றப் பட்டுள்ளன.

                 இந்நூலில்    பதி , பசு , பாச இலக்கணங்களையும்  அதன் இயல்புகளையும் மிக எளிமையாக அனைவரும் விரைவில் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்யம் என்ற படி-நிலைகளையும், சிவப்பேறு அடைதலின் நோக்கம் மற்றும் மார்க்கம் குறித்தும் தன் இயல்பான நடையில் விரித்துரைத்துள்ளார்கள்.

             சைவ சித்தாந்தம் பல பல்கலைக்கழகங்களில் பட்டம் மற்றும் பட்டய பாடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இது மதம் சார்ந்த நூல் என்பதை விட இறைவனை அறிய, அடைய வழி  காட்டும் நூல்  என்று இயம்புவதே சாலச் சிறந்ததாக  இருக்கும். இளைய சமூகத்தினர் இது போல, மனதை செம்மைப் படுத்தும் தத்துவங்களை உள்ளடக்கிய நூல்களை பெற்று படித்து வந்தால் அதன் மூலம் உலகமும் மனித குலமும் உய்வு பெறும்.

Thursday, 19 January 2017

உண்மை ஊழியன்


பேராசிரியர் செல்வகணபதி ஐயா ஒரு கூட்டத்தில் கூறிய செய்தி ..
முன்னொரு காலத்தில் ஒரு ஏழை விவசாயி ( விவசாயி என்றாலே ஏழையாக இருப்பான் போலிருக்கிறது) தன்னுடைய  மனைவியின் உதவியோடு ஏர் கொண்டு உடலை  வருத்தி நிலத்தை உழவு செய்து கொண்டிருந்தார் . அப்போது கரை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளில் இரண்டு சேவை மனதோடு நான் உங்களுக்கு உதவலாமா  என்று கேட்டது ..
அதற்கு அந்த விவசாயி உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. ஆதலால் வேண்டாம் என்று மறுத்தார் . அந்த மாடுகள் விடுவதாயில்லை , எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று கூறி நிலத்தை உழுவதற்கு உற்ற துணைவனாய் உதவியது . உழுதவன் விதைத்தான் , பயிர் வேகமாக வளர்ந்து விளைந்து செழித்தது .

அறுவடை நேரம் நெருங்கியது , கதிர் கட்டுகள் களத்திற்கு வந்து சேர்ந்தன . இப்போது நான் உதவலாமா என்றது மாடுகள் . என்னிடம்  கொடுக்க ஒன்றுமில்லை என்றான்  விவசாயி . பரவாயில்லை  எனக்கு எதுவும் வேண்டாம்  என்று சொல்லி தானியங்களை  பிரித்தெடுக்க போரடிக்க  உதவியது .
குவிந்த நெல்மணிகளை  வண்டியில் போட்டு வீட்டிற்கு இழுத்து கொண்டிருந்தான் - இப்போது நான் உதவலாமா என்றது. வழக்கம் போல என்னிடம்  கொடுக்க ஒன்றுமில்லை என்றான்  விவசாயி.  எனக்கு எதுவும் வேண்டாம்  என்று சொல்லி தானிய மூட்டைகளை அவன் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தது .

திரும்பி வந்த காளைகளை கண்டான் விவசாயி மனம் கசிந்தது . காளைகள் திரும்பி பார்த்து கேட்டது . விளைந்த மணிகளை வீட்டில்  சேர்த்து விட்டேன் . அங்கேயே உங்களுக்கு வேண்டாம் என்று விட்டு வந்த வைக்கோலை நான் உணவாக எடுத்து கொள்கிறேன் .
நெல்மணிகளில் இருந்து  அரிசியை நீங்கள் உணவாக எடுத்து கொள்கிறீர்கள். உங்களுக்கு வேண்டாத தவிடை எனக்கு தாருங்கள்  என  கேட்டது . என்னுடைய உணவு நீங்கள் கொடுத்தது , அதனால் என்னுடைய கழிவுகள் உங்களுக்கு தான் சொந்தம் . அதை உங்கள்  வயலுக்கு உரமாக பயன் படுத்தி கொல்லுங்களென்றது .

Friday, 13 January 2017

Pongal


பொங்கல்...
இது
விளைச்சலின் வெகுமதி
விசுவாசத்தின் விலாசம்
உழைப்பின் உன்னதம்
உண்மையின் உள்ளொளி
நன்றியின் நன்கொடை
நன்னெறியின் நற்பரிசு
ஒற்றுமையின் ஔடதம்
ஒப்பற்ற ஓரொலி..

அனைத்துயிரையும் மதித்து போற்றி
ஆதவனைத் துதித்து நிற்கும்
அற்புதத் திருநாள்...
இத்திருநாளை
உலக நாகரிகத்தின் அடையாளமாக
அகிலத்தின் அனைத்து மனித குலமும்
கொண்டாட வேண்டும்..

Sunday, 1 January 2017

மக்காச் சோளம் - மக்கும் உழவன்


மக்காச்சோளம் என்று தான் 
பயிர் செய்தான்;
மழைமேகம் கை விட்டதால்- 
மக்கியது பயிர் மட்டுமல்ல,
அவன் உயிரும் தான்.

உயிர் வளர்க்க 
வரம் சேர்த்தவன்   மத்தியில்- 
பயிர் செழிக்க உரம் வார்த்தவன்.

வயிறு  புடைக்க உணவுண்டானோ இல்லையோ 
வயல் மடைக்கு நீர் பாய்ச்ச 
தவம் தொடர்ந்தவன்.

வான் மழை மட்டும் வசப்படவில்லை.
வெடித்து பிளந்தது நிலம் மட்டுமல்ல ,
துடித்து நின்ற அவன் உளமும்தான்.

உலகுக்கு உணவளிக்க தன் 
உண்டியை சுருக்கி கொண்டவன்.
உழவனுக்கு நீர் அளிக்க 
இறைவனுக்கும் ஈரமில்லை,
அயல் மாநிலத்தவனுக்கு மனமில்லை.

தூர் வார ஒதுக்கிய நிதியில் 
ஊர்  ஓரம் வாங்கிய நிலங்கள் எத்தனை?
ஆகாயத்தாமரை அகற்றும் ஒதுக்கீட்டில் 
அள்ளி குவித்த சகாயங்கள்  எத்தனை?

கால்வாய்க்கு கரை அமைத்த பொதுப் பணித்துறை,
ஆலவாயன் அமுதுண்டது போல அனைத்தையும் 
நீள சுருட்டி நீர்த்துப் போக செய்தது ...

கட்டுமானத்தில் புதிய கலவை விகிதத்தை 
98:2 என மணலையும் சிமெண்டையும் சேர்த்து 
புதிய தொழில் நுட்பத்தை, ஒப்பந்த காரர்கள் 
அறிமுகம் செய்து தன் மானத்தை 
காற்றில் பறக்க விட்டார்கள் ....

கணக்கு எழுதிய ஏடுகள் 
கனத்து கண்ணீர் வடித்தன,
விவசாயிகளுக்கான துரோகத்தை எண்ணி...

கழனி நிறைய 
பழனிக்கு  பாத யாத்திரை,
உழுதுண்டு  வாழ்ந்ததால் - நிம்மதியற்று 
பழுதுற்றது  அவன் நித்திரை.
மனப்பிணிக்கு ஏது மாத்திரை ?
ஐயகோ மடிகின்றனர் -
ஆளில்லையா ஆறுதலுக்கு? 

சாயக் கொடிகள் 
பல்லாயிரம் பாரதத்தில் ..
விவசாயக் குடிகள் 
வாழமட்டுமா வழியில்லை.