பா. சக்திவேல்

Name

Email *

Message *

Sunday 1 January 2017

மக்காச் சோளம் - மக்கும் உழவன்


மக்காச்சோளம் என்று தான் 
பயிர் செய்தான்;
மழைமேகம் கை விட்டதால்- 
மக்கியது பயிர் மட்டுமல்ல,
அவன் உயிரும் தான்.

உயிர் வளர்க்க 
வரம் சேர்த்தவன்   மத்தியில்- 
பயிர் செழிக்க உரம் வார்த்தவன்.

வயிறு  புடைக்க உணவுண்டானோ இல்லையோ 
வயல் மடைக்கு நீர் பாய்ச்ச 
தவம் தொடர்ந்தவன்.

வான் மழை மட்டும் வசப்படவில்லை.
வெடித்து பிளந்தது நிலம் மட்டுமல்ல ,
துடித்து நின்ற அவன் உளமும்தான்.

உலகுக்கு உணவளிக்க தன் 
உண்டியை சுருக்கி கொண்டவன்.
உழவனுக்கு நீர் அளிக்க 
இறைவனுக்கும் ஈரமில்லை,
அயல் மாநிலத்தவனுக்கு மனமில்லை.

தூர் வார ஒதுக்கிய நிதியில் 
ஊர்  ஓரம் வாங்கிய நிலங்கள் எத்தனை?
ஆகாயத்தாமரை அகற்றும் ஒதுக்கீட்டில் 
அள்ளி குவித்த சகாயங்கள்  எத்தனை?

கால்வாய்க்கு கரை அமைத்த பொதுப் பணித்துறை,
ஆலவாயன் அமுதுண்டது போல அனைத்தையும் 
நீள சுருட்டி நீர்த்துப் போக செய்தது ...

கட்டுமானத்தில் புதிய கலவை விகிதத்தை 
98:2 என மணலையும் சிமெண்டையும் சேர்த்து 
புதிய தொழில் நுட்பத்தை, ஒப்பந்த காரர்கள் 
அறிமுகம் செய்து தன் மானத்தை 
காற்றில் பறக்க விட்டார்கள் ....

கணக்கு எழுதிய ஏடுகள் 
கனத்து கண்ணீர் வடித்தன,
விவசாயிகளுக்கான துரோகத்தை எண்ணி...

கழனி நிறைய 
பழனிக்கு  பாத யாத்திரை,
உழுதுண்டு  வாழ்ந்ததால் - நிம்மதியற்று 
பழுதுற்றது  அவன் நித்திரை.
மனப்பிணிக்கு ஏது மாத்திரை ?
ஐயகோ மடிகின்றனர் -
ஆளில்லையா ஆறுதலுக்கு? 

சாயக் கொடிகள் 
பல்லாயிரம் பாரதத்தில் ..
விவசாயக் குடிகள் 
வாழமட்டுமா வழியில்லை.









4 comments:

  1. வேதனை தான் மிஞ்சுகிறது விவசாயிக்கு......

    ReplyDelete
  2. தலைப்பில் அனைத்தும் முடிந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு தலை பூ ஆனது .... கருத்துக்கு நன்றி

      Delete