பா. சக்திவேல்

Name

Email *

Message *

Saturday, 28 July 2018

கல்வி தரும் வரம் ...


கட்டுரை : பா.சக்திவேல்

Related image





"தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்

நான் படிக்கும் போது என்னை நான் அறியேன், நா ஒன்றோ
ஊன்  படிக்கும், உளம்படிக்கும், உயிர்படிக்கும், உயிர்க்குயிரும்
தான் படிக்கும் அனுபவம் காண் தனிக்கருணைப் பெருந்தகையே"


என சுந்தர மூர்த்தி  நாயனாரின் பாடல்களை படித்த பொழுது, தான்  பெற்ற  அனுபவத்தை இராமலிங்கர் இவ்வாறு எடுத்தியம்பி பரவசம்  அடைகின்றார். 

 நுனி புல் மேய்ந்து கல்வி நிலையங்களில்  உலா வரும் தனித்துவம்  பெற்றவர்கள், மகத்துவம் பெறுவதற்காகவே பாடி  வைத்திருப்பார் போல ...


"நீற்றைப்  புனைந்தென்னே,  நீராடப்  போயுமென்னே, நீ மனமே! 
மாற்றிப் பிறக்க வகை அறிந்தாயில்லை, மாமறை நூல் ஏற்றி கிடக்கும்  ஏழு கோடி மந்திரம் என்ன கண்டீர்! ஆற்றில் கிடந்தும் துறை அறியாமல் அலைகின்றயே !" 
என பட்டினத்துப் பிள்ளை,  நூல்களை படித்தும் அதை உரிய வகையில் செயல் படுத்த தெரியாதவர்களை கடுமையாக சாடுகின்றார்.

கற்ற பின் நிற்க அதற்கு தக! என்று வள்ளுவர், படித்தவர்களுக்கு உரிய பண்புகளோடும், அறிவோடும் நடந்து கொள்ள ஆணை இடுகிறார்.

ஒரு பிறப்பில் ஒருவன் கற்ற கல்வி, இனி வரும் பிறப்புக்கும் பெருமை சேர்க்கும் என வழி  மொழிகிறார்.

"கைப்பொருள்  தன்னின் மெய்ப்பொருள் கல்வி" என்று ஒளவை பிராட்டியார் கல்வியை, கலங்கரை விளக்காக்கினார்.

 "கல்வி கற்காமல் இருப்பதை விட, பிறக்காமல் இருப்பதே மேல்" என பிளாட்டோ உரைத்தார். 

இப்படியெல்லாம் கல்வியை பெருமை படுத்தி நம் முன்னோர்கள் மொழிந்துள்ள போதும், நாம் இன்று பெறுகிற  கல்வி, அதே மன நிலையிலும், ஊக்கத்தோடும் பெறப்படுகிறதா?

மெக்காலே கல்வி முறை, குமாஸ்தாக்களை உருவாக்க முடியுமே தவிர, அறிவாளிகளை உருவாக்க உதவாது என பல்லோர்கள் எதிர்த்த போதும், இந்தியர்களை  படித்த முட்டாள்களாக்க இந்த முறை வலிந்து திணிக்கப்பட்டது.

இந்த கல்வி முறை மாணவர்களுக்கு உதவியாக இருந்ததோ இல்லையோ, நிறைய ஆசிரியர்களுக்கு உதவியாக இருந்ததை ஒத்துக்  கொள்ள வேண்டும். (ஆசிரிய சமூகம் உண்மை  கூறியதற்காக என்னை மன்னிக்க வேண்டும்)

மேலும் இந்த முறையால் அதிக பலன் அடைந்தது  நம்மிடம் உள்ள தனியார் பள்ளிகள். அவர்களின் கல்வி வணிகத்திற்கும் , வருவாய் பெருக்கத்திற்கும், விளம்பர யுக்திக்கும் மிக்க உறுதுணையாக இருந்தது இந்த முறை என்பது யாராலும் மறுப்பதற்கில்லை.

சொன்னதை  சொல்லும் கிளிப் பிள்ளைகளாக மாணவர்களை வார்த்தெடுப்பதில் பெரும் பங்கு வகித்தது மனப்பாடக்  கல்வி முறை . பாட  நூலில் அடிக்  கோடிட்டு  அதை மட்டும் படிப்பது, அடைப்புக் குறி இடுவது என குறுக்கு வழியில் குறிக்கோளை அடைய முற்பட்டவர்கள், எந்த நுழைவுத் தேர்விலும் (அல்லது) தகுதித் தேர்விலும் சோபிக்க இயலவில்லை என்பது நிதர்சனம்.

அதிகமான பாடங்களை படிப்பதிலும், வகுப்பிற்கு தயார் செய்வதிலும் நிறைய நேரம் செலவிட விரும்பாத நிறைய ஆசிரியர்களுக்கு  இந்த முறைதான் கைமேல் பலன் தந்தது. இதற்கு அவர்கள் வைத்த பதில், கிராமப்புற மாணவர்கள், பின் தங்கிய மாணவர்கள், ஏழை மாணவர்கள் .....

நான் கேட்கிறேன், ஒரு ஏழை மாணவனால் மனப் பாடம் செய்ய முடியுமென்றால், புரிந்து கொள்ளவும் முடியும் தானே? அப்படியே புரியவில்லை என்றால் அதை சாதிப்பதற்கான முயற்சிகளையும்  பயிற்சிகளையும் எடுக்க வேண்டியது ஆசிரியர்கள் தான். 

இதிலும் ஒரு முட்டுக்கட்டை உண்டு. அது தான் தேர்ச்சி விகிதம். இங்கு தான் அரசியல் விளையாடுகிறது. எல்லோரும் படிக்க வேண்டும் என்று தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை அடுத்த நிலைக்கு தள்ளி விட்டு தன் கடமை முடிந்து விட்டதாய் நிம்மதி பெருமூச்சு விட்டதால் வந்த வினை. அதனால் தான் வந்தது அனைவரும் தேர்ச்சி திட்டம்.

இந்த திட்டத்தால்  எல்லோரும் படிப்பை தொடர்வார்கள் என்ற வாதம் அரசியல் வாதிகளால் முன் வைக்க பட்டது.
இது எப்படி இருக்கிறது என்றால், நான் ஓட்ட பந்தயம் வைப்பேன், ஆனால் அதில் நேரத்தையோ தூரத்தையோ கணக்கிட மாட்டோம் அனைவருக்கும் பரிசு உண்டு என்றால் எத்தனை பேர் ஓடுவார்கள், சிலர் ஊர்வார்கள், சிலர் நகர்வார்கள், சிலர் அமர்ந்தே இருப்பார்கள், சிலர் பந்தயத்தில் கலந்து கொள்ளாமலே கூட வெற்றி பெறுவார்கள்.
இந்த துர்பாக்கிய நிலையில் உருவான மாணவர்கள் கல்லூரிக்கு  போனவுடன் வேங்கை போலவா பாய போகிறார்கள்? அடிப்படையில் அவர்கள் ஆர்வத்தை நீர்த்து போகச் செய்தது இந்த பொன்னான திட்டம்.

கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு பாடத்திலும்  முழு மதிப்பெண் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சங்களை தாண்டுவர். ஆனால் IIT, NIT, IISC, ஜிப்மர்  போன்ற நுழைவுத் தேர்வுகளில் ஜொலித்தவர்கள் மிகக் குறைவு.

அடுத்தது மதிப்பெண் வேட்டை, முதலிட மோகம். இதற்கு, பள்ளி கல்வித்துறை செயலரின் பெரும் முயற்சியால் தற்போதுதான் முற்றுப் புள்ளி வைத்து, தனியார் கல்வி வள்ளல்களின் வள்ளல் தன்மைக்கு கடிவாளம் போடப் பட்டுள்ளது. வரவேற்கத்  தக்க மாற்றம். 10,11,12 மூன்று ஆண்டுகளிலும் பொது தேர்வு. கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தின் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர   இருக்கின்றனர். இதற்கு  பெரிய அளவில் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு கொடுத்து தங்களுக்கு தேவையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, தங்களை உயர்த்தி கொண்டு, மாணவர்களையும் மேம்படுத்தினால் திடமான கல்வி கட்டாயம் கிடைக்கும். 

ஏணிகள் எவ்வளவு உயரம் இருக்கின்றதோ, அவ்வளவு உயரத்தை ஏறுபவர்கள் எளிதில் அடைய முடியும்.

இது போன்ற முயற்சிகள் அரசியல் மாற்றத்தினால், தனியார்களின் பேராசைக்கு விலை போகி விடாமல் உறுதியான கல்வி கிடைக்க தொடர்ந்து வகை செய்ய வேண்டும்.

எழுத்தும்  தெய்வம், எழுது கோல் தெய்வம் என்று பாரதி பகர்ந்ததை போல கல்விக்கு உரிய மரியாதையும், பக்தியும் கிடைக்க வேண்டும்.

இலவசமாக கிடைப்பது எல்லாமே மலினமானதாக கருதாமல், கல்வியை கவனத்தோடு உள் வாங்க, மாணவர்களுக்கு  மன பயிற்சியும், வழி காட்டும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடை பெற வேண்டும்.

உலக தரத்தில் உள்ளீடு முறைகளை மாற்றி, ஆரோக்கியமாக கற்றல் சூழலை உருவாக்குதல், கல்வி கண் திறந்த காமராஜருக்கு செய்யும் கைம்மாறு.

தாய் மொழிக் கல்விக்கு பலம் சேர்த்து, மேற்கல்விக்கு பாலம் அமைக்க வேண்டும். 

சரியான கல்விச் செல்வம் நிறைந்த போதுதான், அகத்துள் ஒளி ததும்பி, அறியாமை இருள் அகன்று, தைரியமும், துணிவும், நம்பிக்கையும், நேர்மையும் விளைந்து, நாடும் வீடும் நலம் பெரும். இது தான் வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந் தொண்டு.

பெற்றோர்கள் வெறும் பொருள் செலவு செய்தால் மட்டும், தன்  குழந்தை கல்வி சீமான் ஆகிவிடும் என்பது பேராசை. தகுந்த வழி  காட்டுதலும்  முன்னுதாரணமாக வாழ்தலும் தேவையான கண்காணிப்பும், சரியான புரிதலும் தான் சந்ததிகளை சக்தி படைத்தவராக மாற்றும். 

மேலும் தொடர்வோம் .....























5 comments:

  1. மெக்காலோ கவ்லித்திட்டத்தைப் பொத்தம் பொதுவாக "அது குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கிலேயர் கல்வித்திட்டம்" என்று மட்டும் சொல்லிச் செல்கிறார்கள். அந்த சொற்றோடரை அனைவரும் அப்படியே எடுத்து செல்கிறார்கள். மெக்காலே கல்வித்திட்டம் குறித்த தரவுகள் வாசிக்க கிடைக்கின்றன. மெக்காலே கல்வித்திட்டம் இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன் எம்மாதிரியான கல்வித்திட்டம் இந்திய மண்ணில் இருந்தது என்பதும் அதுவே தொடரப்பட்டிருந்தல் இன்று இந்தியா என்னவாக இருந்திருக்கும் என்பதையும் அவர்கள் பேசுவதில்லை.

    ReplyDelete
  2. தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
    நிறை குறைகளை வாசித்து ஆய்ந்து, மெக்காலே கல்வித் திட்டம் குறித்து தனிப் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  3. அற்புதம்

    ReplyDelete