தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் சீருடை என்ற பெயரில் பல ஆடைக் கட்டுப்பாடுகளை மாணவர்களிடத்தில் கொண்டு வருகிறது.
கழுத்தை நெறிக்கும் நாடாவைக் கட்டிக் கொண்டு, சட்டையை பேண்ட்க்குள் திணித்துக் கொண்டு, கால்களை விறைத்த காற்றுப் புகாத தோல் சுருக்கில் சிக்க வைத்து, இயல்புக்கு மாறான கனமான மேலங்கியைப் போர்த்திக் கொண்டு நடமாடுவது ஆங்கிலேயர்கள் அங்கிருக்கும் கடுங்குளிரை சமாளிக்கும் யுக்திகள்.
ஆடைகளின் மீது கொண்ட மோகம், அவர்கள் எந்த அளவிற்கு நம்மை அடிமை படுத்தினார்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது.
"ஆள் பாதி ஆடை பாதி" என்பது பழமொழி. ஆனால் இன்று பாதி ஆடையில் வெளியே நடமாடி, மீதி மானத்தை துறப்பதுதான் சுதந்திரமா? என்ற கேள்வியும் நிழல் ஆடாமல் இல்லை.
" குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்துநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு"
என்ற நாலடி நமக்கு காட்டுவது உண்மைக் கல்வியை, பகட்டு வணிகக் கல்வியை அல்ல.
நிறைய தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் ஒழுக்கம் என்ற பெயரில் ID கார்டு அணிவது, சட்டையை பேண்டுக்குள் திணித்து வைப்பது, காலணி (தோல்) அணிந்து இருப்பது, சவரம் செய்து இருப்பது இவைகளை ஆய்வு செய்வதற்கு தனி ஆசிரியர் குழுவையும், பின் பற்றாத மாணவர்களுக்கு அபராதம், வெளியில் அனுப்புதல் போன்ற கடும் தண்டனைகள் அளிக்கிறது.
சரி, இப்படி புற வேடங்களை, சரியாக புனைந்து கொண்டு, நல்லார் போல வலம் வந்து, கீழ் தரமான புத்தியையும், வக்ர எண்ணங்களையும் கொண்டு இருப்போரை ஒழுக்க சீலராக கருத
முடியுமா?
வெள்ளாடை அணிந்தவரெல்லாம் வெள்ளை மனம் பெற்று இருந்தால் இந்த உலகம் அமைதி பூங்காவாக மாறி விடாதா?
எது உண்மையான ஒழுக்கம் என திருக்குறள் உள்ளிட்ட பெரிய நூல்கள், அடிப்படையிலேயே மாணவர்களுக்கு அடையாளம் காட்டிய போதும், அவைகளை புறம் தள்ளி, படிப்பவன் சூதும் வஞ்சமும் செய்து போவான்! போவான்! ஐயோன்னு போவான்! என்ற பாரதியின் சாபத்திற்கு, உயிர் கொடுக்க போராடும் பொருத்தமற்றவர்கள் பெருகி வருவது, ஒழுக்கம் பற்றி பேசும் உத்தம புத்திரர்களை கொஞ்சம் உலுக்கி பார்க்காதா?
கள்ளமும், சூழ்ச்சியும், பொறாமையும், பழிவாங்கும் பேராணவமும், தனிமனித ஒழுக்ககேடும், சபலமும், மதுப்பழக்கமும் கொண்டவர்கள் எப்படி எதிர்கால சமூகத்தை வளமானதாக உருவாக்க முடியும்.
தரமற்ற எண்ணங்களை மாற்ற, சூழ்நிலைகளை சுமூகமாக்க பெற்றோர்களின் பங்கும், ஆசிரியர்களின் அரணும் அவசியம்.
புதிதாக ஒரு பிள்ளை வானத்தில் இருந்து குதித்து விடாது. அது நம் வளர்ப்பிலும் வழி காட்டலிலும்தான் உள்ளது. பெண் பிள்ளைகளை எப்படி பாதுகாக்க நினைக்கிறோமோ, அந்த அளவிற்கு ஒரு படி அதிகமாகவே ஆண் குழந்தைகளின் ஒழுக்கத்தை உற்று நோக்க வேண்டும். இது இன்றைய இந்தியாவிற்கு மிக முக்கியமானது. இல்லையென்றால் பாரதம், பழம் பெருமை மட்டுமே பேசமுடியும். புதிய பாரதத்தின் அடையாளமாகக் காட்ட, பாரத மாதாக்களே இருக்க மாட்டார்கள். கலாச்சாரத்தின் காவலராக காட்டிக்கொண்ட இந்தியா, உலகோர் நகைக்கும், அஞ்சும் நாடாக மாறி விடும். பிறகு இந்திய ஆண்கள், பெண் குலம் இன்றி, வேற்று உயிர்களைதான் மணம் செய்து வாழ வேண்டும். அதனால் மனித இனம் யாரும் விரும்பாத பரிணாம வளர்ச்சி பெறும். நாளைய வரலாறு நம்மை வசை பாடும்.
தன்னிலை அறிந்த பிள்ளைகளே, நாட்டின் சொத்து. அவர்கள் தான் நிலையான வளர்ச்சியையும் நம்பிக்கையையும் நமக்கு அளிப்பார்கள்.
Great sir... Telling solutions to real time problems...
ReplyDeleteநன்றி. பொரிகள் பெருநெருப்பாகட்டும்.
Deleteஉண்மையை உரக்கச் சொன்னாய் நண்பா
ReplyDeleteநன்றி தோழரே!
ReplyDelete