கட்டுரை: பா . சக்திவேல்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, வீட்டிற்கு வருகிற விருந்தினர் முதல், அக்கம் பக்கத்தினர் வரை எல்லோரும் குழந்தைகளைப் பார்த்தவுடன் கேட்பது என்ன படிக்கிறாய்?, எங்கு படிக்கிறாய் என்ற கேள்வி தான். அப்படி, படிப்பிற்கும் வளமான வாழ்க்கைக்கும் ஒரு வலுவானத் தொடர்பு இருந்தது. ஆனால் இன்றைய விலைவாசிகளை சமாளிக்க, மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள அரசு ஊழியர்களால் மட்டுமே முடியும். அவர்களுக்குத் தான் இன்றைய நிலவரத்தை கலவரமின்றி சமாளிக்கும் வகையில் படி முதல் படிபடியாய் உயர்வு பெறுகிறது.
தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிவோர் பெருமளவு வருவாய் ஈட்டினாலும், விரைவில் வெளியேற்றப்படுகின்றனர். தொகுப்பூதியம் பெறுவோரும், தனியார் துறையில் பணி புரிவோரும் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்றபடி அல்லாடி வருகின்றனர். தினக் கூலியாக 100 ரூபாய்க்கு வேலை செய்பவர்50 ரூபாயை பேருந்து கட்டணமாக செலவு செய்ய வேண்டும். வாடகை வீட்டில் இருப்போர், நாட்காட்டியின் நகர்வில் கடவுளின் சோதனையை அறிந்து கொள்கின்றனர்.
அனைவருக்கும் அரசுப் பணி வாய்க்கப் பெறுமா? ஏற்கனவே தம்மிடம் உள்ள துறைகளையும், தனியாரிடம் தள்ளி விட்டு நிம்மதி பெறத் துடிக்கின்றது அரசு. அனைத்துக் கட்டுப்பாட்டையும் இழந்த பிறகு இந்த அமைச்சரவையும், இத்தனை அமைச்சர்களும் என்ன வேலை செய்யப் போகின்றார்கள்? மாநாடு நடத்துவதும், மாலை போடுவதும் தான் அவர்கள் வேலையா? என்ற கேள்வி மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது.
அரசு வேலை வாய்ப்பை பெறுவது அவ்வளவு எளிதானதா? சில நூறு பதவிகளுக்கு, பல லட்ச மக்கள் போட்டி போடுவது வாடிக்கையாகி வருகிறது. தேர்வுக்குத் தயார் செய்வதற்கென்றே அல்லும் பகலும் தகவல்களை மனப்பாடம் செய்யும் கூட்டம் ஒரு பால். பல லட்சங்களைக் கொடுத்து குறுக்கு வழியில் லட்சியத்தை அடையத் துடிக்கும் செல்வந்தர்களும், இன வேந்தர்களும் அதிகம். திறமை இருந்தாலே வேலை கிடைத்து விடாது. எந்த சாதியில் எந்த மதத்தில் பிறந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தே நமது தகுதி நிர்ணயிக்கப் படுகிறது.
அத்தனைத் தடைகளையும் தாண்டினாலும் நிறைய பதவிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு என்கிற பெயரில் பண பேரம் பேசப்படுவது உரறிந்த உண்மையாக மாற்றப் பட்டுவிட்டது.
நேர்மை, தூய்மை என்பதை படித்தாலும், செயல்படுத்துவதில் சிக்கல்கள் விக்கல்களைப் போல விசும்பச் செய்கிறது.
நிறைய படித்து படித்து பட்டங்களை அடுக்கிக் கொள்ளுவதை (கொல்லுவதை) விட, ஒரு படிப்போடு பிழைப்பு தேடி ஓடியவர்கள் அதிபுத்திசாலிகளாகப் பார்க்கப் படுகின்றனர்.
முன்பெலாம் பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளையின் படிப்பைக் கேட்டவர்கள், தற்போது எவ்வளவு படித்தால் என்ன? சம்பளம் என்ன? என்று கேட்கத் துவங்கி விட்டனர். நீ என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் ஒரு லட்சமாவது வருவாய் ஈட்ட வேண்டும் என எதிர் பார்ப்பது பகட்டு வாழ்க்கைக்கு பணிந்து விட்டது தான். பேர் இல்லாவிட்டாலும் ஒரு கார் இல்லாமல் வாழ்வது வீண் என வீழ்ந்து விட்டனர்.
"அறிவு அற்றம் காக்கும் கருவி" . தற்போது அறிவு வேறு, கல்வி வேறு என்று பிரித்து பொருள் சொல்லும் அளவிற்கு நமது கல்வி மழுங்கி வருவதாக கல்வியாளர்கள் சொல்கின்றனர்.
கல்வி நிலையங்கள் கூழாங்கற்களை பளிச்சிட செய்கின்றனவே தவிர, வைரங்களை ஒளி மங்க செய்கின்றன என இங்கர்சால் சொல்லுவார். கல்வி- அறிவுக்காகவும், வாழ்க்கை திறனுக்காகவும் என்றது மாற்றம் பெற்று பொருளுக்கானதாய் மாறி போனது. எங்கள் நாட்டில் இத்தனை சதவீதம் கல்வி பெற்று விட்டனர் என்று மார் தட்டிக் கொள்ள நம் அரசியல் ஆளுமைகள் வந்து விடுகின்றனரே தவிர, கற்றோரின் நிலையில் கரிசனம் காட்ட தயாராகவில்லை.
காலம் காலமாக வணிகமும், வேளாண்மை பணியையும் சிறப்பாக செய்து வந்தோருக்கு, தரம் அற்ற கல்வியை கொடுத்து, தட்டு தடுமாறி தேர்ச்சி பெற்ற கோடி கணக்கானவர்கள் தன் குடும்ப தொழிலையும் தொடர முடியாமல், அரை குறையாய் படித்ததை வைத்து நிகழ் கால போட்டியை சமாளிக்க முடியாமல், பணம் கொடுத்து பணிவாங்க பொருள் வசதியும் இல்லாமல் அல்லல் அடைகின்றனர்.
ஓரளவு படித்து விட்டு தொழில் செய்வோரே, நல்ல நிலையில் இருக்கையில், சுமாராக படித்து விட்டு பறி தவிப்போர் பலர் உருவாகின்றனர்.
ஆகவே படித்தால் உன் வாழ்க்கை நல்லாயிருக்கும் என்று இனி எவரிடமும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் எப்படி படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னால் தான் அவருக்கு ஓரளவிற்கு நன்மை கிடைக்கும்.
பத்தாம் வகுப்பு படித்த கல்வி அமைச்சரின் கையால் தான், பல்லாயிரம் பேர் முனைவர் பட்டம் பெறுவார்கள் எனில் இதன் நிலை என்ன? அதுவும் காசு கொடுத்தால் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க, பல பல்கலை கழகங்கள் காத்து கிடக்கின்றன.
அசாத்திய அறிவு பெற்றவர், பணம் படைத்தவர் எதுவும் செய்யலாம், பிறப்பால் வழி பெற்றவர்கள், பெரும் செல்வாக்கு பெற்றவரை உறவினராகவோ அல்லது சாதியினராகவோ பெற்றவர்கள் இப்படி தடைகளை கடக்கும் காரணிகளை கைவசம் பெற்றவர்கள்தான், தனக்கான ஒரு இடத்தை தேடும் நிலை உருவாகியுள்ளது. இது மென்மேலும் வளர்ந்து பெரும் இறுக்கத்தையும் புரட்சியையும் உருவாக்கும்.
நான் பார்த்த வரை நீங்கள் சொல்வது உண்மைதான் . ஆனாலும் படிப்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடிவதில்லையே
ReplyDeleteமுடியாதுதான். நான் கூற வந்தது, பெரும்பாலனவர்கள் கல்வி கற்றும் அடையும் வேதனை குறித்து...
ReplyDeleteயதார்த்தமான உண்மை...
ReplyDeleteஇனி பிள்ளைகளுக்கு கல்வி மட்டுமே பயன் தராது என்பதை புரிந்து கொள்ளும்படி சொல்லுவதே அவர்களது எதிர் காலத்திற்கு நன்மை பயக்கும்.
உண்மை கல்வி பயன் தரும். கல்வி என்ற பெயரால் இன்று மாணவர்கள் பெறுவது முழு பலன் தராத சூழல் உள்ளது. பல காரணிகளைக் கடந்து தான் வெற்றியை எட்ட முடியும். வேலை பெறுவதும் வெற்றியாகத்தான் பார்க்கப் படுகிறது. நன்றி நண்பரே
Delete"காலம் காலமாக வணிகமும், வேளாண்மை பணியையும் சிறப்பாக செய்து வந்தோருக்கு, தரம் அற்ற கல்வியை கொடுத்து, தட்டு தடுமாறி தேர்ச்சி பெற்ற கோடி கணக்கானவர்கள் தன் குடும்ப தொழிலையும் தொடர முடியாமல், அரை குறையாய் படித்ததை வைத்து நிகழ் கால போட்டியை சமாளிக்க முடியாமல், பணம் கொடுத்து பணிவாங்க பொருள் வசதியும் இல்லாமல் அல்லல் அடைகின்றனர்"
ReplyDelete100% உண்மை!
கடலில் மீன் இல்லை என்று கரைக்குத் திரும்பி கைவிரித்தோர் குறைவு. விடா முயற்சியால் நா வறண்டு புயல் மழையில் சிக்குண்டோர் அதிகம்.
Deleteஉண்மை கல்வி பயன் தரும். கல்வி என்ற பெயரால் இன்று மாணவர்கள் பெறுவது முழு பலன் தராத சூழல் உள்ளது. பல காரணிகளைக் கடந்து தான் வெற்றியை எட்ட முடியும். வேலை பெறுவதும் வெற்றியாகத்தான் பார்க்கப் படுகிறது. நன்றி நண்பரே
ReplyDelete