பா. சக்திவேல்

Name

Email *

Message *

Saturday, 28 July 2018

கல்வி தரும் வரம் ...


கட்டுரை : பா.சக்திவேல்

Related image





"தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்

நான் படிக்கும் போது என்னை நான் அறியேன், நா ஒன்றோ
ஊன்  படிக்கும், உளம்படிக்கும், உயிர்படிக்கும், உயிர்க்குயிரும்
தான் படிக்கும் அனுபவம் காண் தனிக்கருணைப் பெருந்தகையே"


என சுந்தர மூர்த்தி  நாயனாரின் பாடல்களை படித்த பொழுது, தான்  பெற்ற  அனுபவத்தை இராமலிங்கர் இவ்வாறு எடுத்தியம்பி பரவசம்  அடைகின்றார். 

 நுனி புல் மேய்ந்து கல்வி நிலையங்களில்  உலா வரும் தனித்துவம்  பெற்றவர்கள், மகத்துவம் பெறுவதற்காகவே பாடி  வைத்திருப்பார் போல ...


"நீற்றைப்  புனைந்தென்னே,  நீராடப்  போயுமென்னே, நீ மனமே! 
மாற்றிப் பிறக்க வகை அறிந்தாயில்லை, மாமறை நூல் ஏற்றி கிடக்கும்  ஏழு கோடி மந்திரம் என்ன கண்டீர்! ஆற்றில் கிடந்தும் துறை அறியாமல் அலைகின்றயே !" 
என பட்டினத்துப் பிள்ளை,  நூல்களை படித்தும் அதை உரிய வகையில் செயல் படுத்த தெரியாதவர்களை கடுமையாக சாடுகின்றார்.

கற்ற பின் நிற்க அதற்கு தக! என்று வள்ளுவர், படித்தவர்களுக்கு உரிய பண்புகளோடும், அறிவோடும் நடந்து கொள்ள ஆணை இடுகிறார்.

ஒரு பிறப்பில் ஒருவன் கற்ற கல்வி, இனி வரும் பிறப்புக்கும் பெருமை சேர்க்கும் என வழி  மொழிகிறார்.

"கைப்பொருள்  தன்னின் மெய்ப்பொருள் கல்வி" என்று ஒளவை பிராட்டியார் கல்வியை, கலங்கரை விளக்காக்கினார்.

 "கல்வி கற்காமல் இருப்பதை விட, பிறக்காமல் இருப்பதே மேல்" என பிளாட்டோ உரைத்தார். 

இப்படியெல்லாம் கல்வியை பெருமை படுத்தி நம் முன்னோர்கள் மொழிந்துள்ள போதும், நாம் இன்று பெறுகிற  கல்வி, அதே மன நிலையிலும், ஊக்கத்தோடும் பெறப்படுகிறதா?

மெக்காலே கல்வி முறை, குமாஸ்தாக்களை உருவாக்க முடியுமே தவிர, அறிவாளிகளை உருவாக்க உதவாது என பல்லோர்கள் எதிர்த்த போதும், இந்தியர்களை  படித்த முட்டாள்களாக்க இந்த முறை வலிந்து திணிக்கப்பட்டது.

இந்த கல்வி முறை மாணவர்களுக்கு உதவியாக இருந்ததோ இல்லையோ, நிறைய ஆசிரியர்களுக்கு உதவியாக இருந்ததை ஒத்துக்  கொள்ள வேண்டும். (ஆசிரிய சமூகம் உண்மை  கூறியதற்காக என்னை மன்னிக்க வேண்டும்)

மேலும் இந்த முறையால் அதிக பலன் அடைந்தது  நம்மிடம் உள்ள தனியார் பள்ளிகள். அவர்களின் கல்வி வணிகத்திற்கும் , வருவாய் பெருக்கத்திற்கும், விளம்பர யுக்திக்கும் மிக்க உறுதுணையாக இருந்தது இந்த முறை என்பது யாராலும் மறுப்பதற்கில்லை.

சொன்னதை  சொல்லும் கிளிப் பிள்ளைகளாக மாணவர்களை வார்த்தெடுப்பதில் பெரும் பங்கு வகித்தது மனப்பாடக்  கல்வி முறை . பாட  நூலில் அடிக்  கோடிட்டு  அதை மட்டும் படிப்பது, அடைப்புக் குறி இடுவது என குறுக்கு வழியில் குறிக்கோளை அடைய முற்பட்டவர்கள், எந்த நுழைவுத் தேர்விலும் (அல்லது) தகுதித் தேர்விலும் சோபிக்க இயலவில்லை என்பது நிதர்சனம்.

அதிகமான பாடங்களை படிப்பதிலும், வகுப்பிற்கு தயார் செய்வதிலும் நிறைய நேரம் செலவிட விரும்பாத நிறைய ஆசிரியர்களுக்கு  இந்த முறைதான் கைமேல் பலன் தந்தது. இதற்கு அவர்கள் வைத்த பதில், கிராமப்புற மாணவர்கள், பின் தங்கிய மாணவர்கள், ஏழை மாணவர்கள் .....

நான் கேட்கிறேன், ஒரு ஏழை மாணவனால் மனப் பாடம் செய்ய முடியுமென்றால், புரிந்து கொள்ளவும் முடியும் தானே? அப்படியே புரியவில்லை என்றால் அதை சாதிப்பதற்கான முயற்சிகளையும்  பயிற்சிகளையும் எடுக்க வேண்டியது ஆசிரியர்கள் தான். 

இதிலும் ஒரு முட்டுக்கட்டை உண்டு. அது தான் தேர்ச்சி விகிதம். இங்கு தான் அரசியல் விளையாடுகிறது. எல்லோரும் படிக்க வேண்டும் என்று தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை அடுத்த நிலைக்கு தள்ளி விட்டு தன் கடமை முடிந்து விட்டதாய் நிம்மதி பெருமூச்சு விட்டதால் வந்த வினை. அதனால் தான் வந்தது அனைவரும் தேர்ச்சி திட்டம்.

இந்த திட்டத்தால்  எல்லோரும் படிப்பை தொடர்வார்கள் என்ற வாதம் அரசியல் வாதிகளால் முன் வைக்க பட்டது.
இது எப்படி இருக்கிறது என்றால், நான் ஓட்ட பந்தயம் வைப்பேன், ஆனால் அதில் நேரத்தையோ தூரத்தையோ கணக்கிட மாட்டோம் அனைவருக்கும் பரிசு உண்டு என்றால் எத்தனை பேர் ஓடுவார்கள், சிலர் ஊர்வார்கள், சிலர் நகர்வார்கள், சிலர் அமர்ந்தே இருப்பார்கள், சிலர் பந்தயத்தில் கலந்து கொள்ளாமலே கூட வெற்றி பெறுவார்கள்.
இந்த துர்பாக்கிய நிலையில் உருவான மாணவர்கள் கல்லூரிக்கு  போனவுடன் வேங்கை போலவா பாய போகிறார்கள்? அடிப்படையில் அவர்கள் ஆர்வத்தை நீர்த்து போகச் செய்தது இந்த பொன்னான திட்டம்.

கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு பாடத்திலும்  முழு மதிப்பெண் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சங்களை தாண்டுவர். ஆனால் IIT, NIT, IISC, ஜிப்மர்  போன்ற நுழைவுத் தேர்வுகளில் ஜொலித்தவர்கள் மிகக் குறைவு.

அடுத்தது மதிப்பெண் வேட்டை, முதலிட மோகம். இதற்கு, பள்ளி கல்வித்துறை செயலரின் பெரும் முயற்சியால் தற்போதுதான் முற்றுப் புள்ளி வைத்து, தனியார் கல்வி வள்ளல்களின் வள்ளல் தன்மைக்கு கடிவாளம் போடப் பட்டுள்ளது. வரவேற்கத்  தக்க மாற்றம். 10,11,12 மூன்று ஆண்டுகளிலும் பொது தேர்வு. கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தின் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர   இருக்கின்றனர். இதற்கு  பெரிய அளவில் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு கொடுத்து தங்களுக்கு தேவையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, தங்களை உயர்த்தி கொண்டு, மாணவர்களையும் மேம்படுத்தினால் திடமான கல்வி கட்டாயம் கிடைக்கும். 

ஏணிகள் எவ்வளவு உயரம் இருக்கின்றதோ, அவ்வளவு உயரத்தை ஏறுபவர்கள் எளிதில் அடைய முடியும்.

இது போன்ற முயற்சிகள் அரசியல் மாற்றத்தினால், தனியார்களின் பேராசைக்கு விலை போகி விடாமல் உறுதியான கல்வி கிடைக்க தொடர்ந்து வகை செய்ய வேண்டும்.

எழுத்தும்  தெய்வம், எழுது கோல் தெய்வம் என்று பாரதி பகர்ந்ததை போல கல்விக்கு உரிய மரியாதையும், பக்தியும் கிடைக்க வேண்டும்.

இலவசமாக கிடைப்பது எல்லாமே மலினமானதாக கருதாமல், கல்வியை கவனத்தோடு உள் வாங்க, மாணவர்களுக்கு  மன பயிற்சியும், வழி காட்டும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடை பெற வேண்டும்.

உலக தரத்தில் உள்ளீடு முறைகளை மாற்றி, ஆரோக்கியமாக கற்றல் சூழலை உருவாக்குதல், கல்வி கண் திறந்த காமராஜருக்கு செய்யும் கைம்மாறு.

தாய் மொழிக் கல்விக்கு பலம் சேர்த்து, மேற்கல்விக்கு பாலம் அமைக்க வேண்டும். 

சரியான கல்விச் செல்வம் நிறைந்த போதுதான், அகத்துள் ஒளி ததும்பி, அறியாமை இருள் அகன்று, தைரியமும், துணிவும், நம்பிக்கையும், நேர்மையும் விளைந்து, நாடும் வீடும் நலம் பெரும். இது தான் வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந் தொண்டு.

பெற்றோர்கள் வெறும் பொருள் செலவு செய்தால் மட்டும், தன்  குழந்தை கல்வி சீமான் ஆகிவிடும் என்பது பேராசை. தகுந்த வழி  காட்டுதலும்  முன்னுதாரணமாக வாழ்தலும் தேவையான கண்காணிப்பும், சரியான புரிதலும் தான் சந்ததிகளை சக்தி படைத்தவராக மாற்றும். 

மேலும் தொடர்வோம் .....























Friday, 27 July 2018

இணைய தளம்


கட்டுரை : பா.சக்திவேல்

Image result for social media

இணைய தளம், பல பேர் இணையும் தளமாகவும், இணைக்கும் தளமாகவும்  மாற்றம் பெற்று இருப்பது தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிதான்.

 பாரதத்தின் அரசியல் கட்சிகள் மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு இலக்கியம், விவசாயம், சட்டம்,  கலை, ஊடகம்  என பல குழுக்களை நிறுவி அதன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது.

ஆனால் அத்தனை அணிகளையும் பின்னுக்கு தள்ளி, சமூக ஊடகங்களில் உலா வருகின்ற, facebook , whatsapp , twitter  போன்ற பயன் பாடுகளை பக்குவமாக பயன்படுத்திக் கொள்ள மிகுந்த முனைப்புடன் தற்போது  செயல் பட்டு வருகின்றது. 

இணைய தள அணி , facebook அணி  , whatsapp அணி , twitter அணி என்ற பல்வேறு குழுக்கள் உருவாக்கப் பட்டு, தங்கள் கட்சிகளின் புகழ் பாடுவதையும், மற்றவர்களின் குறைகளை விமர்சனம் செய்யவும் செயல் பட்டு வருகின்றது. 

உண்மைகளை ஊரறிய சொல்வதில் தவறில்லை. போலி செய்திகளை ஆதார படுத்த, ஆவணம் ஆக்க  ஆணவத்தோடு செயல்படுவது தான்  இளைஞர்களின் நம்பகத்தன்மையை நாசம் செய்து நிர்மூலமாக்குகிறது.

நீங்கள் இவ்வளவு படித்தது பொய்யுரை பரப்பாவா? வதந்திகளை வழங்கவா? உங்கள் கற்பனை  திறனும், ஆக்க சக்தியும், மக்களை குழப்புவதற்காகவா?

போலிகளை வீசினால், நாளைக்கு நீங்கள் எது  சொன்னாலும்  கேலியும் கிண்டலுமாக போய்விடுமே தவிர உங்கள்  சிந்தனையும் , கருத்தும் கவனம் பெறாது. உங்களின் மகத்துவத்தை நீங்களே கெடுத்து  கொள்வதுதான் ஆனந்தமா?

நான்காம் தமிழ் சங்கம் வளர்த்த பாண்டித்துரை தேவர், திருக்குறளை பிழையாக அச்சிட்டு ஒருவர் வெளியிட்டார் என்பதறிந்து , அத்தனை  நூல்களையும்  தாமே பொருள் செலவு செய்து வாங்கி தீயிட்டு அழித்தார்  என்பது வரலாறு. அது மாதிரி நல்லெண்ணம் கொண்டவர்கள் தற்காலத்தில் மிக அரிது. ஆகவே 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.


மணக்குடவர் உரை: 
யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது. 

பரிமேலழகர் உரை: 
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. (குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல் , நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.). 

ஐயன் திருவள்ளுவரின் அறிவுறுத்தலுக்கேற்ப செயலாற்றுவது மேன்மை பயக்கும்.

memes உருவாக்குபவர்கள் தமிழைக் கொல்வது போல, வேற்று எம்மொழியினரும் தமிழில் பிழை செய்து இருக்க மாட்டார்கள்.

மொழி ஒரு தனி  அடையாளம், அதை சிதிலம் அடைய செய்வது அவமானம். அதை உண்மை கூற பயன் படுத்துவதுதான் அறிவார்ந்தோர் ஆற்றும் செயல்.


படிப்பதனால் பயனுண்டா?

        கட்டுரை: பா . சக்திவேல் 



Image result for graduation dress code



     இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, வீட்டிற்கு வருகிற விருந்தினர் முதல், அக்கம் பக்கத்தினர் வரை எல்லோரும் குழந்தைகளைப் பார்த்தவுடன் கேட்பது என்ன படிக்கிறாய்?, எங்கு படிக்கிறாய் என்ற கேள்வி தான். அப்படி, படிப்பிற்கும் வளமான வாழ்க்கைக்கும் ஒரு வலுவானத் தொடர்பு இருந்தது. ஆனால் இன்றைய விலைவாசிகளை சமாளிக்க, மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள அரசு ஊழியர்களால் மட்டுமே முடியும். அவர்களுக்குத் தான் இன்றைய நிலவரத்தை கலவரமின்றி சமாளிக்கும் வகையில் படி முதல் படிபடியாய் உயர்வு பெறுகிறது. 

   தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிவோர் பெருமளவு வருவாய் ஈட்டினாலும், விரைவில் வெளியேற்றப்படுகின்றனர். தொகுப்பூதியம் பெறுவோரும், தனியார் துறையில் பணி புரிவோரும் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்றபடி அல்லாடி வருகின்றனர். தினக் கூலியாக 100 ரூபாய்க்கு வேலை செய்பவர்50 ரூபாயை பேருந்து கட்டணமாக செலவு செய்ய வேண்டும். வாடகை வீட்டில் இருப்போர், நாட்காட்டியின் நகர்வில் கடவுளின் சோதனையை அறிந்து கொள்கின்றனர்.
    அனைவருக்கும் அரசுப் பணி வாய்க்கப் பெறுமா? ஏற்கனவே தம்மிடம் உள்ள துறைகளையும், தனியாரிடம் தள்ளி விட்டு நிம்மதி பெறத் துடிக்கின்றது அரசு. அனைத்துக் கட்டுப்பாட்டையும் இழந்த பிறகு இந்த அமைச்சரவையும், இத்தனை அமைச்சர்களும் என்ன வேலை செய்யப் போகின்றார்கள்? மாநாடு நடத்துவதும், மாலை போடுவதும் தான் அவர்கள் வேலையா? என்ற கேள்வி மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

     அரசு வேலை வாய்ப்பை  பெறுவது அவ்வளவு எளிதானதா? சில நூறு பதவிகளுக்கு, பல லட்ச மக்கள் போட்டி போடுவது வாடிக்கையாகி வருகிறது. தேர்வுக்குத் தயார் செய்வதற்கென்றே அல்லும் பகலும் தகவல்களை மனப்பாடம் செய்யும் கூட்டம் ஒரு பால். பல லட்சங்களைக் கொடுத்து குறுக்கு வழியில் லட்சியத்தை அடையத் துடிக்கும் செல்வந்தர்களும், இன வேந்தர்களும் அதிகம். திறமை இருந்தாலே வேலை கிடைத்து விடாது. எந்த சாதியில்  எந்த மதத்தில் பிறந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தே நமது தகுதி நிர்ணயிக்கப் படுகிறது.

   அத்தனைத் தடைகளையும் தாண்டினாலும் நிறைய பதவிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு என்கிற பெயரில் பண பேரம் பேசப்படுவது உரறிந்த உண்மையாக மாற்றப் பட்டுவிட்டது.

  நேர்மை, தூய்மை என்பதை படித்தாலும், செயல்படுத்துவதில் சிக்கல்கள் விக்கல்களைப் போல விசும்பச் செய்கிறது.

  நிறைய படித்து படித்து பட்டங்களை அடுக்கிக் கொள்ளுவதை (கொல்லுவதை) விட, ஒரு படிப்போடு பிழைப்பு தேடி ஓடியவர்கள் அதிபுத்திசாலிகளாகப் பார்க்கப் படுகின்றனர்.

 முன்பெலாம் பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளையின் படிப்பைக் கேட்டவர்கள், தற்போது எவ்வளவு படித்தால் என்ன? சம்பளம் என்ன? என்று கேட்கத் துவங்கி விட்டனர். நீ என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் ஒரு லட்சமாவது வருவாய் ஈட்ட வேண்டும் என எதிர் பார்ப்பது பகட்டு வாழ்க்கைக்கு பணிந்து விட்டது தான். பேர் இல்லாவிட்டாலும் ஒரு கார் இல்லாமல் வாழ்வது வீண் என வீழ்ந்து விட்டனர்.

   "அறிவு அற்றம் காக்கும் கருவி" . தற்போது அறிவு வேறு, கல்வி வேறு என்று பிரித்து  பொருள் சொல்லும் அளவிற்கு நமது கல்வி மழுங்கி வருவதாக கல்வியாளர்கள் சொல்கின்றனர். 


Image result for staircase
   
 கல்வி நிலையங்கள்  கூழாங்கற்களை பளிச்சிட செய்கின்றனவே தவிர, வைரங்களை ஒளி மங்க செய்கின்றன என இங்கர்சால் சொல்லுவார்.  கல்வி- அறிவுக்காகவும், வாழ்க்கை திறனுக்காகவும் என்றது மாற்றம் பெற்று பொருளுக்கானதாய்  மாறி போனது. எங்கள் நாட்டில் இத்தனை சதவீதம் கல்வி பெற்று விட்டனர் என்று மார் தட்டிக் கொள்ள நம் அரசியல் ஆளுமைகள் வந்து விடுகின்றனரே தவிர, கற்றோரின் நிலையில் கரிசனம் காட்ட தயாராகவில்லை.

   காலம் காலமாக வணிகமும், வேளாண்மை பணியையும் சிறப்பாக செய்து வந்தோருக்கு, தரம் அற்ற கல்வியை கொடுத்து, தட்டு தடுமாறி தேர்ச்சி பெற்ற கோடி கணக்கானவர்கள் தன் குடும்ப தொழிலையும் தொடர முடியாமல், அரை குறையாய் படித்ததை வைத்து நிகழ் கால போட்டியை சமாளிக்க முடியாமல், பணம் கொடுத்து பணிவாங்க பொருள் வசதியும் இல்லாமல் அல்லல் அடைகின்றனர். 

ஓரளவு படித்து விட்டு தொழில் செய்வோரே, நல்ல நிலையில் இருக்கையில், சுமாராக படித்து விட்டு பறி தவிப்போர் பலர் உருவாகின்றனர்.

 ஆகவே படித்தால் உன் வாழ்க்கை நல்லாயிருக்கும் என்று இனி எவரிடமும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் எப்படி படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னால் தான் அவருக்கு  ஓரளவிற்கு நன்மை கிடைக்கும். 

  பத்தாம் வகுப்பு படித்த கல்வி அமைச்சரின் கையால் தான், பல்லாயிரம் பேர் முனைவர் பட்டம் பெறுவார்கள் எனில் இதன் நிலை என்ன? அதுவும் காசு கொடுத்தால் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க, பல பல்கலை கழகங்கள் காத்து கிடக்கின்றன. 

  அசாத்திய அறிவு பெற்றவர், பணம் படைத்தவர் எதுவும் செய்யலாம், பிறப்பால் வழி பெற்றவர்கள், பெரும் செல்வாக்கு பெற்றவரை உறவினராகவோ அல்லது சாதியினராகவோ பெற்றவர்கள் இப்படி தடைகளை கடக்கும் காரணிகளை கைவசம் பெற்றவர்கள்தான், தனக்கான ஒரு இடத்தை தேடும் நிலை உருவாகியுள்ளது. இது மென்மேலும் வளர்ந்து பெரும் இறுக்கத்தையும் புரட்சியையும் உருவாக்கும்.

Tuesday, 24 July 2018

உலக ஒழுக்கம் ஆடையா?





Image result for Tie,ID, SHOE dress code



தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் சீருடை என்ற பெயரில் பல ஆடைக் கட்டுப்பாடுகளை மாணவர்களிடத்தில் கொண்டு வருகிறது.

கழுத்தை நெறிக்கும் நாடாவைக் கட்டிக் கொண்டு, சட்டையை பேண்ட்க்குள் திணித்துக் கொண்டு, கால்களை விறைத்த காற்றுப் புகாத தோல் சுருக்கில் சிக்க வைத்து, இயல்புக்கு மாறான கனமான மேலங்கியைப் போர்த்திக் கொண்டு நடமாடுவது ஆங்கிலேயர்கள் அங்கிருக்கும் கடுங்குளிரை சமாளிக்கும் யுக்திகள்.

ஆடைகளின் மீது கொண்ட மோகம், அவர்கள் எந்த அளவிற்கு நம்மை அடிமை படுத்தினார்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது. 

"ஆள் பாதி ஆடை பாதி" என்பது பழமொழி. ஆனால் இன்று பாதி ஆடையில் வெளியே நடமாடி, மீதி மானத்தை துறப்பதுதான் சுதந்திரமா? என்ற கேள்வியும் நிழல் ஆடாமல் இல்லை.

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
   மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
   நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
   கல்வி அழகே அழகு"

என்ற நாலடி நமக்கு காட்டுவது உண்மைக் கல்வியை, பகட்டு வணிகக்  கல்வியை அல்ல.

நிறைய தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் ஒழுக்கம் என்ற பெயரில்  ID கார்டு  அணிவது, சட்டையை பேண்டுக்குள் திணித்து வைப்பது, காலணி (தோல்) அணிந்து இருப்பது, சவரம்  செய்து இருப்பது  இவைகளை ஆய்வு செய்வதற்கு தனி ஆசிரியர் குழுவையும், பின் பற்றாத மாணவர்களுக்கு அபராதம், வெளியில் அனுப்புதல் போன்ற கடும் தண்டனைகள் அளிக்கிறது.

சரி, இப்படி புற  வேடங்களை, சரியாக புனைந்து  கொண்டு, நல்லார் போல  வலம்  வந்து, கீழ் தரமான  புத்தியையும், வக்ர எண்ணங்களையும் கொண்டு இருப்போரை ஒழுக்க சீலராக கருத
முடியுமா?

வெள்ளாடை அணிந்தவரெல்லாம் வெள்ளை மனம் பெற்று இருந்தால் இந்த உலகம் அமைதி பூங்காவாக மாறி விடாதா?


எது உண்மையான ஒழுக்கம் என திருக்குறள் உள்ளிட்ட பெரிய நூல்கள், அடிப்படையிலேயே மாணவர்களுக்கு அடையாளம் காட்டிய போதும், அவைகளை புறம் தள்ளி, படிப்பவன் சூதும் வஞ்சமும் செய்து போவான்! போவான்! ஐயோன்னு போவான்! என்ற பாரதியின் சாபத்திற்கு, உயிர் கொடுக்க போராடும் பொருத்தமற்றவர்கள்  பெருகி வருவது, ஒழுக்கம் பற்றி பேசும் உத்தம புத்திரர்களை கொஞ்சம் உலுக்கி பார்க்காதா?

கள்ளமும், சூழ்ச்சியும், பொறாமையும், பழிவாங்கும்  பேராணவமும், தனிமனித  ஒழுக்ககேடும், சபலமும்,  மதுப்பழக்கமும் கொண்டவர்கள் எப்படி எதிர்கால  சமூகத்தை வளமானதாக உருவாக்க முடியும்.

தரமற்ற  எண்ணங்களை மாற்ற, சூழ்நிலைகளை சுமூகமாக்க பெற்றோர்களின்  பங்கும், ஆசிரியர்களின் அரணும் அவசியம்.

புதிதாக ஒரு பிள்ளை  வானத்தில் இருந்து  குதித்து விடாது. அது நம் வளர்ப்பிலும் வழி காட்டலிலும்தான் உள்ளது. பெண் பிள்ளைகளை எப்படி பாதுகாக்க நினைக்கிறோமோ, அந்த அளவிற்கு ஒரு படி அதிகமாகவே ஆண் குழந்தைகளின் ஒழுக்கத்தை உற்று நோக்க வேண்டும். இது இன்றைய இந்தியாவிற்கு மிக முக்கியமானது. இல்லையென்றால் பாரதம், பழம் பெருமை மட்டுமே பேசமுடியும். புதிய பாரதத்தின் அடையாளமாகக் காட்ட, பாரத மாதாக்களே இருக்க மாட்டார்கள். கலாச்சாரத்தின் காவலராக காட்டிக்கொண்ட இந்தியா, உலகோர் நகைக்கும், அஞ்சும் நாடாக மாறி விடும். பிறகு இந்திய ஆண்கள், பெண் குலம் இன்றி, வேற்று  உயிர்களைதான் மணம் செய்து வாழ வேண்டும். அதனால் மனித இனம் யாரும் விரும்பாத பரிணாம வளர்ச்சி  பெறும். நாளைய வரலாறு  நம்மை வசை பாடும்.

தன்னிலை அறிந்த பிள்ளைகளே, நாட்டின் சொத்து. அவர்கள் தான் நிலையான வளர்ச்சியையும் நம்பிக்கையையும் நமக்கு அளிப்பார்கள்.