பா. சக்திவேல்

Name

Email *

Message *

Saturday 4 December 2021

நாளெல்லாம் வினை செய்! - 7

 


நாளெல்லாம்  வினை செய்!

- முனைவர் பா.சக்திவேல் 

 

“வென்றவர்களுக்கும்   தோற்றவர்களுக்கும் வரலாற்றில் பக்கங்கள் உண்டு, வேடிக்கை பார்த்தவர்களுக்கும்  விமர்சனம் செய்தவர்களுக்கும் ஒரு வரி கூட கிடையாது" என்ற வரிகள் நினைவூட்டுவது உழைப்பு, முயற்சியின் அவசியத்தை. ஒருவர் வெல்ல வேண்டுமானால் இன்னொருவர் தோற்க வேண்டும் என்று அவசியமில்லை.

 

தோற்ற ஒருவர் இன்னொருவரின் வெற்றிக்கு உதவி    புரிகிறார், வென்ற ஒருவர் தோற்ற ஒருவரின் அடுத்த வெற்றிக்கு உந்துசக்தியாக  இருக்கிறார். ஆக, இருவருமே  ஒருவருக்கு ஒருவர் சகதொடர்புடையவர்கள்தான்.

 

இவர்களில் வென்றவர்களை மட்டும் உலகம் ஆராதிக்கிறது, கொண்டாடுகிறது, வெற்றி இசை பாடுகிறது. தோற்றவர்களை வசை பாடுகிறது   உண்மை புரிந்திடாத  உலகம். ஒளியை தூரத்திலும் காண்கிறோம், அதன் பிறப்பிடத்தில்  இணைந்து இருக்கிற வெப்பத்தை அருகில் வந்தால்தான் உணர்கிறோம். அதுபோலத்தான்  வெற்றி வெகுதூரம் பயணிக்கிறது, அதற்கு உடந்தையாக இருந்த தோல்வி உள்நின்று  உடற்றுகிறது.

 

உலகில் துருவங்கள் இரண்டு, காந்த புலங்கள், மின் புலங்கள் இரண்டு. பிறப்பு வகைகள் இரண்டு என எல்லாம் இரண்டாக இருப்பது, ஒன்று   மற்றொன்றை  அடையாளம் காட்டத்தான். வெற்றி தோல்வி என்பது உழைப்பெனும்  வேள்வியில் முயற்சி, திறமை, நேரமெனும் ஆகுதிகள் இடும்போது கிடைக்கப்பெறும் அவிழ்ப்பாகங்கள். இதில் இரண்டுமே பாராட்டத்தக்கது. வெற்றி கவர்ச்சிகரமானது, தோல்வி வெற்றியை கவர்ந்திழுக்க வல்லது. வெற்றிக்கு முதல் பரிசெனில் தோல்விக்கு இரண்டாம் பரிசு. இவ்விரண்டிற்கும் உள்ள இடைவெளி மிகச் சொற்பம். அதை அடைவதுதான் மிக நுட்பம்.

 

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்"

 

கடன் ஆற்ற வேண்டியவர் திடமாக இருப்பின் நினைத்தவற்றை செய்து முடிக்க இயலும் என்பது குறள் காட்டும் வழி. வெறும் குரல் வழியாக வெற்றியை பற்றிவிட முடியாது. மனதால், வாக்கால், காயத்தால் எண்ணி உழைத்து  காரிய வெற்றி பெற தவம் போல செயலாற்ற வேண்டும்.

உலக வாழ்க்கை பெருங்கனவு, அதில் உண்டு உறங்கி பின்  இடர் செய்து செத்திடும் கலக மானிடப்  பூச்சிகளின் வாழ்க்கை கனவிலும் கனவு காண்! என்பார் பாரதி.                    அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில்  அகப்பட்டு  அனுதினமும் அதற்கே  அனைத்து நேரத்தையும் செலவு செய்து வாழ்க்கை என்னும் பெரும் பயணத்தில் இலக்கை அடைவதற்குள் இளகிப்போய்விடும் பதார்த்தமாய் வீணாகிவிடும். காலன் வரும் முன்னே காலத்தை வென்றவர்கள்தான் வரலாற்று நாயகர்களாகி மிளிர்கின்றனர்

 

வயது முதுமையினால் உடல்  தளர்ச்சி, மனத்  தளர்ச்சி வர சிலருக்கு  வாய்ப்புள்ளது. ஆனால் ஓயாது உழைக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் அடுத்தடுத்த திட்டங்களை வகுத்துக்கொண்டு செல்வர். ஒவ்வொரு திட்டத்தையும்  செயலாக செவ்வனே மாற்றியதில் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்க்கையில் உழைத்துக் களிப்பர். இந்த உழைக்கும் பழக்கத்தை பெரியவர்களான பிறகுப்  பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் பெருத்த ஏமாற்றம் வரலாம். இதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு  சக்கர வாகனத்தைச் சொல்லலாம். புதிய வாகனமாக வாங்கியதில் இருந்து சீரான இடைவெளிக்குப் பிறகு நன்கு இயக்கப்பட்ட வாகனம் வயதானாலும் விரைந்து செல்கிறது. குறிப்பிட்ட வேகத்திலேயே ஓட்டி பழக்கப்பட்ட வாகனம் கொஞ்சகாலம் கழித்தப் பிறகு எவ்வளவு முடுக்கினாலும் மதமதவென மிதமான வேகத்திலேயே அடங்கி செல்வதைப் பார்த்திருப்போம். ஆகவேதான் "ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என ஓங்கி ஒலித்தான் பாரதி.   இளம்பிராயத்தில் உழைப்பதனை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் முதுமைக் காலத்திலும் உறக்கம் வரமால் படுக்கைக்குச்  செல்லமாட்டார்கள், காலத்தை  வீணில் கழிக்க மாட்டார்கள்.

 

இன்றைய சூழலில் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் செய்வதற்கென எந்த வேலையையும் சொல்வதில்லை. அவர்களாகவே செய்ய விரும்பி வந்தால்கூட எதற்கும்  அனுமதிப்பதில்லை. இப்படி வளரும் பிள்ளைகள்தான் திடீர் என்று ஒரு நாள் குடும்பத் தலைவர்  அல்லது தலைவி பொறுப்பை ஏற்கப்போகிறார்கள். கல்வி பயில்வது என்பது வெறும் பாடப்புத்தகத்தை படிப்பது மட்டும் கிடையாது. அதிலிருந்து மட்டும் குழந்தைகள் வளர்வதற்குத் தேவையான  முழுமையான அறிவு, உள்ளீடுகள் கிடைத்துவிடுவதில்லை. வரலாற்றுப்பதிவுகளை மனப்பாடம் செய்யும் வேளையில், சமகால வரலாற்று நிகழ்வுகளை அறிந்திடாமலே பலர் இருந்து விடுகின்றனர்.

 

மௌரியர்களையும், முகலாயர்களையும் படிக்கும் நேரத்தில் தற்போதைய  மாநில, மத்திய அரசுகளை அவர்களை அறிந்திருக்க வேண்டாமா? உழைப்பின் உன்னதத்தை செய்யுள்களில் படிக்கும் அதே நேரத்தில் உழைப்பை அனுபவிக்க அவர்கள் அனுமதிக்க வேண்டாமா? வெறும் ஏட்டுச் சுரைக்காயாக அவர்களை உருவாக்கி இன்னல் விளைவிப்பதில் அவர்களுக்கு என்ன நன்மைகளை செய்துவிட முடியும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். வீட்டில் நிகழவும் ஒவ்வொரு செயலிலும் குழந்தைகளை ஈடுபட ஈர்ப்பது மூலமும், அவர்களிடம் வேலை சொல்வதின் மூலமும் அவர்களை தகுதி உள்ளவர்களாக உருவாக்குகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


continues.....




3 comments:

  1. சில முயற்சிகளின்போது எனக்கு பின்னடைவு ஏற்படும்போது வெற்றி வாய்ப்பினை இழந்ததாக நினைத்துக்கொள்வேன், தோற்றதாக நினைப்பதில்லை.

    ReplyDelete
  2. தோல்வி அடுத்த வெற்றிக்கான வாய்ப்புதான் ஐயா. தங்களைப் போன்ற வெற்றியாளர்கள் என்றுமே தோல்வி கண்டு துவண்டு போவதில்லை. நன்றி

    ReplyDelete