பா . சக்திவேல்

Name

Email *

Message *

Monday, 4 September 2017

கப்பலோட்டியத் தமிழன்


  “சுதந்திரம் எனது பிறப்புரிமை – அதை நான் அடைந்தே தீருவேன்” என்று முழக்கமிட்ட லோகமான்ய பாலகங்காதரத் திலகரின்பால் ஈர்ப்பு கொண்ட, தமிழகத்தின் சுதந்திர வேள்விச் சுடர் வ.உ.சிதம்பரனாரின் நூற்று நாற்பத்தைந்தாவது பிறந்த நாளில் அவர் புகழ் போற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழனின், ஏன் ஒவ்வொரு இந்தியனின் தலையாயக் கடமை. இன்று ஆசிரியர் தினம் என்பதால் அவர் குருநாதரைக்  முன்னிறுத்தித்  துவங்கியுள்ளோம். மிகச் சிறந்த, புகழ் பெற்ற வழக்கறிஞரான அவர் கி.பி 1893 முதல் திலகரின் பேச்சாலும் போராட்டங்களாலும் கவரப்பட்டவர். பின்பு ஆங்கிலேயரின் அதிகாரத்தையும், அடக்குமுறையையும் எதிர்த்து மேடைகளில் முழங்கினார். தூத்துக்குடியில் ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்ட “கோரல் காட்டன் மில்ஸ்” ல் வேலை செய்த தொழிலாளர்களின் துயர் தீர்க்கக் களமிறங்கித் தீவிர பிரச்சாரம் செய்தார். வேலை நிறுத்தம், போராட்டம் என உழைப்பாளிகள் முன்னெடுத்த முயற்சியால் அரை பங்கு ஊதிய உயர்வு, ஞாயிறு விடுமுறை, உணவு இடைவேளை, அவசர கால விடுப்பு என பலன்கள் கிடைத்துப் போராட்டம் வெற்றி பெற்றது. 
  பாண்டித்துரைத் தேவரை தலைவராகவும், தான் செயலராகவும் இருந்து சுதேசிக் கப்பல் கழகத்தை தூத்துக்குடியில் நிறுவினார். கப்பல் வாங்கவும், நிறுவனத்தை மேம்படுத்தவும் போதிய நிதியின்மையால் வடநாட்டிற்கு சென்று தனவந்தர்களிடமும், வணிகர்களிடமும் நிதி பெற்று,    வ.உ.சி யின்  முயற்சியால்  கி.பி 1907 ல் எஸ்.எஸ்.காலியோ, எஸ்.எஸ்.லாலோ ஆகிய இரண்டு கப்பல்களும்; தூத்துக்குடி துறைமுகத்திற்கு விரைந்தன. 
வங்காளத்திற்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல்களை இயக்கியது அவர்களின் கோபத்தைத் தூண்டியது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்புவிற்கு கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கினார். பின்பு சிலிர்த்தெழுந்த ஆங்கிலேயாகள் தம்முடைய கப்பல்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காக கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தனர். வ.உ.சி யும் குறைத்தார். பின்னர் இலவசப் போக்குவரத்து, பரிசு பொருள்கள் என மேலும் ஆசைகளைக் காட்டி இன்று போல் அன்றும் இலவசத்திற்கு ஏங்கி நின்ற மக்களைத் தம் வசம் ஈர்த்தனர். வ.உ.சியின் கப்பல் கழகம் முதலுக்கே மோசம் வந்து தள்ளாடியது. அவரின் பாரிஸ்டர் பட்டத்தை பறித்துக் கொண்டது வெள்ளைய அரசு.
  பாரதித் தோற்றுவித்த “பால பாரத சங்கம்” தமிழகமெங்கும் பொதுக் கூட்டங்களை நடத்தி ஆங்கிலேயரின் கொட்டத்தை அடக்க முனைந்தது. “சிவம் பேசினால் சவம் எழுந்து நிற்கும்” என்ற பெருமைக்குரிய சுப்ரமணிய சிவா, வ.உ.சி, பாரதி ஆகியோர் கைக்கோற்தனர். கி.பி 1908 ல் பிபின் சந்திரபாலின் சிறை விடுதலை விழா நெல்லையில் நடைபெற்றது. இதில் தடையை மீறி வ. உ. சி கலந்து கொண்டார். அதனால் அவரைக் கைது செய்தனா.; அதே நாளில் திலகரையும் சிறை பிடித்தனர். இதற்கிடையே தூத்துக்குடி ஆட்சியர் விஞ்ச் மற்றும் துணை ஆட்சியர் ஆஷ் ஆகியோரின் சூழ்ச்சியால் சுதேசிக் கப்பல் கழகம் கைப்பற்றப்பட்டது. கைது நடவடிக்கை காட்டுத் தீயாய் பரவி மக்கள் போராட்டத்தில் குதித்ததால் வெள்ளைய அரசு சிதம்பரனாரை விடுவித்தது. ஆனால் அன்றே வேறு ஒரு வழக்கை பிணைத்து இந்தியாவிலேயே அதுவரை எவருக்கும் விதிக்கப்படாத தண்டனையாக “அரசாங்கத்தை எதிர்த்ததற்காக 20 ஆண்டுகள், சிவாவுக்கு தங்க இடமும் உணவும் அளித்ததற்காக 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள்” கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை, கோவை சிறைகளில் அடைக்கப்பட்டார். அங்கு சணல் உரிக்கும் இயந்திரத்தை மாடுபோல் சுற்றச் செய்தனர். கைகள் தோலுரிந்து காயங்கள் நிறைந்து வறுத்தியது, இரண்டு கருங்கற்கள் கொண்ட எண்ணை ஆட்டும் செக்கை சுமந்து கால்களும் கைகளும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் சுற்றி வந்தார், நூல் முறுக்கேற்றும் வேலை, அச்சு கோற்கும் வேலை ஆகியவற்றால் உடல் நலிவுற்றது. இத்தனை இன்னல்களையும் நாட்டிற்காக தாங்கிக்கொண்டார். தமிழ் இலக்கியத்திலும், சைவத்திலும் ஆர்வம் கொண்டவர். சிறையில் இருந்து கொண்டே “ஜேம்ஸ் ஆலன்” என்ற நூலை “மனம் போல வாழ்வு” என்று மொழிபெயர்த்து எழுதினார். பின்பு சில ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். தன்னை அழைத்துச் செல்ல பெருங்கூட்டம் வருமென நோக்கிய சிதம்பரனாரின் முகத்தில் வாட்டமே மிஞ்சியது. தொழுநோயால் பீடிக்கப்பட்ட சிவாவும் தன் மனைவி மக்களைத் தவிர வேறு எவரும் வரவில்லை. 
“இதந்தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறி பழிமிகுந்து இழிவுற்றாலும்
விதந்தரு கோடியின்னல் விளைத்தெனை அழித்திட்டாலும்
சுதந்திரதேவி! நின்னைத் தொழுதடி மறக்கிலேனே”
என்ற பாரதியின் கண்ணீர் வரிகளைப் போல வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரங்களை அனுபவித்து நாட்டுக்காக செந்நீர் சிந்தியவர்.
 “சிறை வாழ்க்கை வேற்றாரின் கொடிய சட்டம்
சித்ரவதை குண்டடிகள் யாவுந் தாங்கித்
தேகமெலாந் தியாகவடுப் பெற்று நின்ற
சிங்கங்காள் செக்கிழுத்த சிதம்பரமே!”
எனப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரும் வீரத்தைப் போற்றுகின்றார். 
  பின்னர் புதுவையில் பாரதி, அரவிந்தர் ஆகியோருடன் கூடி நாட்டு விடுதலைக்கான எடுகோள்களை பரிசீலனை செய்தனர். வாலஸ் என்ற ஆங்கிலேயரின் உதவியால் மீண்டும் வழக்கறிஞராகி ஏழைகளுக்கு சட்ட உதவிகளை மேற்கொண்டார். சென்னை, கோவைப் பகுதிகளில் இருந்த தொழில் அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் விழிப்புணர்வு பிரச்சாகராகவும் செயல்பட்டார். செல்வச் சீமானான பிள்ளைவாள் செக்கிழுத்தார், இளம் மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து சிறையில் வாடினார், செல்வங்களை இழந்து துயருற்றார், சுதேசி இயக்கத்திற்காகக் குரல் கொடுத்தார், காங்கிரசு பேரியக்கத்தில் இருக்த போதும் திலகரின் மறைவுக்குப் பின்னால் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தார். விவேகானந்தரின் நெறிப்படி சக்தியால் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை பெருக்க நினைத்தார். அகிம்சையை ஆதரித்தார். அவர் நினைத்திருந்தால் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத சுக போக வாழ்வை வாழ்ந்திருக்கலாம். ஆனால் நாட்டின் சுதந்திரம், மக்களின் உரிமை, தன்மானம், ஒடுக்குமுறைக்கு எதிரான ஒருங்கொலி இவைகள்தான் அவர் நெஞ்சில் நிழலாடியது.
  வ.உ.சிதம்பரம் பிள்ளை சைவத்தின் வேதமாக போற்றப்படும் மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு உரை கண்டவர். தன் உயிர் ஒடுங்கும் வேளையில் திருவாசகமோ, தேவாரமோ இசைக்கச் செய்யாமல் சிவகுருநாதன் என்ற தொண்டரை அழைத்து “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”  என்ற தேசபக்திப் பாடலை பாடவைத்து கேட்டுக் கொண்டே இமை மூடினார்.
  “வேளாளன் சிறை புகுந்தான் தமிழர் மன்னனென மீண்டான்” என மகாகவி இவருக்கு வாழ்த்துப்பாவை வரிந்துரைத்திருப்பார். தனது உயிரைத் துச்சமாக மதித்து, உடலில் மிச்சம் ஏதுமில்லை எனும்படி அச்சமின்றி அயராது நாட்டிற்காக உழைத்த அந்தப் புண்ணிய ஆத்மாவை, தியாகத்தின் திருவுருவை வணங்குவது ஒப்பற்ற தேசத் தலைவருக்கு, ஒரு இந்தியக் குடிமகனாக நாம் செலுத்தும் மரியாதையாகும்.

“தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
                  மன்னுயிர் எல்லாம் தொழும்”- பேராசிரியர் பா.சக்திவேல், புதுக்கோட்டை

No comments:

Post a Comment