பா. சக்திவேல்

Name

Email *

Message *

Tuesday, 21 December 2021

National Mathematics Day - Article


"கணிதத்தை இனிதாக  நேசித்த மேதை"

 

தொழிநுட்பமும், பொறியியலும் கோலோச்சும் இந்த யுகத்தின் முன்னோடியாக, அடிப்படையாக இருந்தவை, என்றும் இருப்பவை கணிதமும் அறிவியலும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை, மறப்பதற்கும்  இல்லை. கணிதம் என்றாலே பல காத தூரம் ஓடுவோர் இன்றும் பலர். ஆனால் கணிதத்தை புனிதமாக நேசித்து, அதையே நொடிதோறும் சுவாசித்து, அதில் பல இசை விழுமியங்களை வாசித்து காட்டியவர் கணிதமேதை  ஸ்ரீனிவாச ராமானுஜம். எந்த எண்ணை  அதே எண்ணால்  வகுத்தாலும் விடை  ஒன்று  என்று பாடம் நடத்திய ஆசிரியரிடம் பூஜ்ஜியதை  பூஜ்ஜியத்தால் வகுத்தால் விடை வரவில்லையே  என்று வினா எழுப்பி தனது கணித ராஜ்ஜியத்தை துவங்கியவர்கிபி 2012ஆம் ஆண்டில் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் 125வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அப்போதைய  பாரதப்  பிரதமர் மன்மோகன் சிங், டிசம்பர் 22 ம் தேதியை தேசிய கணித தினமாக அறிவித்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ராமானுஜத்தின் கணிதத்திற்கான பங்களிப்புகள் உலக அளவில் பிரமிக்க வைப்பவை. தீர்வு காண முடியாத சூத்திரங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள ஆய்வு மாணவர்களும், பேராசிரியர்களும் புரிந்துகொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர்.


 அவர் சிறு குழந்தையாக இருந்தபோது அம்மை நோயால் பாதிப்புக்கு உள்ளாகி  தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே இறந்தவர்கள் எண்ணிக்கை  பல ஆயிரத்தை தாண்டும். உடன் பிறந்தவர்களும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள். இவரும் நோயின் உக்கிரத்தால் பீடிக்கப்பட்டு பிறகு மீண்டு வந்தவர்தான். 32 வயதுக்குள் வாழ்க்கையை தீராத பிணி பறித்துக் கொண்ட போதிலும் இவருடைய சத்தமில்லாத சரித்திர சாதனைகள் ஏராளம். தன்னுடைய 13 வயதிலேயே எஸ்.எல்.லோனே எழுதிய அட்வன்ஸ்டு டிரிக்னோமெட்ரியை கரைத்துக் குடித்தவர். திரிகோணமிதியில் சமன்பாடுகளை எழுதி தேற்றங்களை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். கும்பகோணம் பள்ளியில் படிக்கின்ற போதே கணிதத் தேர்விற்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் பாதி நேரத்திற்குள்ளாகவே தேர்வை எழுதி முடித்து ஆச்சர்யம் ஊட்டியவர், பள்ளியின் தலைசிறந்த மாணவர் என்று தலைமை ஆசிரியரின் பாராட்டுச்  சான்று பெற்றவர்

சாப்பாட்டிற்கு முறையான உணவு வகைகள் இன்றி பசியோடு வாடிய போதும், கோலங்கள் அணி செய்யும் சாரங்கபாணி  ஆலய பிரகாரங்களில் இவருடைய கணித ஜாலங்கள் அழகு செய்தன. பள்ளி நேரம் முடிந்தும் கணித நேரத்தை முடித்துக்கொள்ள மனமில்லாமல் அதோடு உறவாடியவர், வாதம் செய்தவர், சாத்திரங்களை மறந்து புது சூத்திரம் சமைத்தவர்.

 

கும்பகோணம் அரசு கல்லூரியில் உதவித்தொகையோடு பட்டம் பயில சென்ற போதிலும் கணிதத்தின் மீதிருந்த தீராத காதலினாலும் வேட்கையினாலும் மற்ற பாடங்களில் அவருக்கு கவனம் செலுத்த இயலாமல் போனது. பிறகு சென்னை பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பெல்லோ ஆப் ஆர்ட்ஸ் பட்டம் படிக்க  சேர்ந்த போதிலும் அதை நிறைவு செய்யாமலே வெளியேறினார். இந்திய கணிதவியல் கழகத்தின் நிறுவுனர்  ராமசாமி ஐயர்  மற்றும் அதன் செயலாளர்  ராமச்சந்திர  ராவ் ஆகியோரின் உதவியால் இந்திய கணிதவியல் கழகத்தின் இதழ்களில் தன்னுடைய ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். அலுவலகத்தில் 20 ரூபாய் சம்பளத்திற்கு எழுத்தராக பணியாற்றி மனைவியோடு வாழ்ந்து வறுமையோடு வாடியது கண்ணீரை நிரப்பும் நாட்கள். இந்த போராட்டத்திலும் கணிதத் தேரோட்டியிருக்கிறார் என்றால் அதுதான் பிறவி தாகம், கணித மோகம்.

 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் ஹார்டி உதவியால்  நிறைய தேற்றங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இவருடைய ஆய்வுகள் குறிப்பாக வடிவியல், பெர்னோலி  எண்கள், முடிவிலி, ராமானுஜம் முதன்மை எண்கள் சார்ந்து இருந்தது. இவர் தேற்றத்தின் மூலம் வரையறுத்த சுமார் 3900 முடிவுகளில் இன்னும் பெரும்பாலானவைகள் உலக கணித மேதைகளால் புரிந்து கொண்டு தீர்க்கப்படாமல் இருப்பது இவருடைய கணித தீட்சணியத்தை உலகத்திற்கு உரைக்கும். இரண்டு அடியில் உலகை அளந்தவர் திருவள்ளுவர், ரெண்டு மூன்று அடிகளில் மிக சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு  தந்தவர் ராமானுஜர்

 

உலக  அளவில்  சஞ்சிகைகளை  வெளியிடுவதில் முன்னணி பதிப்பு நிறுவனமான ஸ்ப்ரிங்கர்,  "இராமானுஜம்" என்கிற பெயரில் இதழ் வெளியிடுகிறது. இது 1997 ஆம் ஆண்டு  முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது,  ராமானுஜம் செய்த ஆய்வுகளுக்காகவே, அந்தந்த தலைப்புகளில் உலகம் முழுவதும் இருந்து ஆய்வுக்கட்டுரைகளை பெற்று வெளியிடப்பட்டு வருகிறது. இதனுடைய முதன்மை ஆசிரியராக இந்தியாவைச் சேர்ந்த பிரபல கணிதவியலாளர், தற்சமயம் அமெரிக்காவினுடைய ஃப்ளோரிடா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் கிருஷ்ணசுவாமி அல்லாடி பணிபுரிகிறார்

 

புறக் காரணங்களையும், உதவாத காரணிகளையும் கூறி ஆசிரியர்களையும் பெற்றோர்களையும்  சமாளித்துவரும் நாகரிகமான()வர்கள் பொருளாதார வசதியின்றி வறுமையோடும் நோய்களோடும் உழன்று பெருமையோடு பேசும் விடாமுயற்சியையும், சிந்தை வளத்தையும், அறிவு  பலத்தையும் பெற்று சரித்திரம் படைத்ததை  உணர்ந்து கொள்ள வேண்டும். காலத்தால் அழியாத கணித ஞானத்தால், ஞாலத்தை வெற்றிகொண்ட விசித்திர மேதை இராமானுஜத்தின் புகழ் பூமி உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

 


 

No comments:

Post a Comment