சைவ சித்தாந்த நன்னெறி - நூல் அறிமுகம்
ஆசிரியர் : சித்தாந்த செம்மணி , சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன்
வெளியீடு : மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை ,
அம்மாபேட்டை , தஞ்சாவூர்.
கிடைக்குமிடம் :
எனது பார்வையில் .....
இந்த நூலைப் படைத்திருக்கும் சைவத் திரு .சௌரிராஜன் அவர்கள், அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். உறைப்பான ஆன்மீகப் பற்றினாலும், தொண்டாலும் வாழ்வின் பெரும் பகுதியை இறைப் பணிக்காக ஒதுக்கி வைத்தவர் . ஆசிரியப்பணி ஓய்விற்குப் பிறகு, முழுநேர இறைத் தொண்டில் நிறைவு கண்டு வருபவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ சித்தாந்த பேராசிரியராக பணி செய்து வருபவர். திருவாசகம் முற்றோதல் மூலம் தமிழகம் அறிந்த சிவ நேயர் .
சைவ சித்தாந்தத்தின் ஒவ்வொரு பகுதியையும் முழுமையான ஆய்வு செய்து, எளிய நடைமுறை உதாரணங்கள் வழியாக, அரிய தத்துவங்களை, தொடர்ந்து தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் சிறப்பாக செய்து வருபவர். பதினான்கு சாத்திரங்களின் விரிவுரையை சுமார் 250 மணி நேரங்களுக்கு மேல் வழங்கியுள்ளார். அவை குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. யூ -ட்யூப் லும் பதிவேற்றப் பட்டுள்ளன.
இந்நூலில் பதி , பசு , பாச இலக்கணங்களையும் அதன் இயல்புகளையும் மிக எளிமையாக அனைவரும் விரைவில் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்யம் என்ற படி-நிலைகளையும், சிவப்பேறு அடைதலின் நோக்கம் மற்றும் மார்க்கம் குறித்தும் தன் இயல்பான நடையில் விரித்துரைத்துள்ளார்கள்.
சைவ சித்தாந்தம் பல பல்கலைக்கழகங்களில் பட்டம் மற்றும் பட்டய பாடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இது மதம் சார்ந்த நூல் என்பதை விட இறைவனை அறிய, அடைய வழி காட்டும் நூல் என்று இயம்புவதே சாலச் சிறந்ததாக இருக்கும். இளைய சமூகத்தினர் இது போல, மனதை செம்மைப் படுத்தும் தத்துவங்களை உள்ளடக்கிய நூல்களை பெற்று படித்து வந்தால் அதன் மூலம் உலகமும் மனித குலமும் உய்வு பெறும்.
திரு சௌரிராஜன் அவர்களை நன்கறிவேன். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ சித்தாந்த வகுப்பின் ஆசிரியராக அவர் எனக்கு அறிமுகமானார். எப்பொழுதும் இன்சொல். இனிமையான முகம். நிதானமான பேச்சு. அருமையான கருத்துகள் பகிர்வு. நல்ல பண்பாளர். அவருடைய நூலை அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி.
ReplyDeleteநன்றி.
ReplyDelete