பா. சக்திவேல்

Name

Email *

Message *

Sunday, 23 July 2017

பூசாரிக்கு மனமில்லை ....

"சாமி வரம் கொடுத்தும் பூசாரி வழங்க மறுக்கிறார் "
இது பல நிலைகளில் அன்றாடம் பயன் படுத்தும் பழமொழி .

 மன்னரைப்  புகழ்ந்து பாடி பரிசுகளைப் பெறுவது அன்று தொட்டு இன்று வரை புலவர்களின் அடிப்படை செயல்களாக இருந்து வருகிறது . இந்த எழுதப்படாத முறைக்கு ஏற்ப ஒரு புலவர் , தனது நாட்டை ஆளும் மன்னரை சந்தித்துப் பாடி போற்றுவதற்காக அரசவைக்கு வருகை தர இருந்தார். இந்த செய்தியை அறிந்த மன்னரும் புலவரை தக்க முறையில் கௌரவிக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சருக்கு உத்தரவு இட்டார். ஆனால் அமைச்சர் பெருமானுக்கு இதில் விருப்பமில்லை . நம் ஊரில் வாழும் புலவருக்கு இவ்வளவு மரியாதைகளா ? நாம் இப்படியே இதை விட்டு விட்டால் புலவர் என்று சொல்லி வந்து, பலரும் பரிசுபெற்று செல்வார்கள் . நம்முடைய நிலை என்னாவது என்று யோசித்து, இந்த புலவரை ஏளனமாக அலட்சியம் செய்ய நினைத்தார்.
 மறுநாள் காலை சபைக்கு வந்தார் புலவர் . தன்னுடைய இயல்பான கவிச்சுவையால் சரம் சரமாக பாக்களை பொழிந்தார், மன்னர் மகிழ்ந்தார் . அவரை பெருமை படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த பட்டு ஆடையை போர்த்தினார். இந்த புலவருக்கு கிழிந்த ஆடை போதும் என்று அவமதிக்க காத்திருந்த அமைச்சரின் கீழ்தரமான எண்ணத்தால், தாம் அறியாது ஓரத்தில் கிழிந்த ஆடையை அளித்தார். அதன் மேல் செய்யப்பட்டிருந்த பூவேலைப்பாடுகளில் இருந்த இயற்கை ரசனையை வருணித்தார். புலவரே ! இதோ பாருங்கள் ..... இதில் பூ   உள்ளது , காய் உள்ளது , கனி உள்ளது என்றார் . உடனே அமைச்சரின் குறை புத்தியை நாகரிகமாக எடுத்து காட்ட எண்ணிய புலவர் , அரசே ! பிஞ்சும் உள்ளது  என்றார். புரிந்து கொண்டார்  மன்னர். புலவருக்கு வேறு ஒரு நல்லாடையை அளித்து , பரிசும் அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார் . அமைச்சரை அழைத்து பின் வசை பாடினார் . இந்த கதையை பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேடைகளில் கூறி வருகின்றனர்.........
       இது இன்றும் பல அரசு அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் தொடர்ந்து நடை பெற்று வருவதுதான்..... தலைமைக்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் பல  பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் , பலன்கள் , ஏன் ஊதிய உயர்வு  இவை எல்லாவற்றிலும் தன்னுடைய மட்டமான புத்தியை காட்டி அவர்கள் வயிற்றில் அடிக்க நினைப்பவர்கள் பலர் .
புதிதாக பணிக்கு வந்து சேர்பவர்களை அடி  மாட்டு விலைக்கு பேரம் பேசி அதன் மூலம் தன்னுடய எதேச்சதிகாரத்தை தன்னுடைய அலுவலகத்தில் காட்ட நினைக்கும் உயரதிகாரிகளும் உண்டு ......




   தனக்குக்  கீழ் பணியாற்றுபவர்களை புண் படும் வார்த்தைகளால் நோகடித்து அதன் மூலம் தான் பெரிய நிர்வாகி என்று காட்டிக் கொள்வோரும் இருக்கிறார்கள். இந்த  மாதிரியான பூசாரிகளின் வாழ்க்கையும், பார்ப்பதற்கு -பல பேர் வாழ்க்கையில் உடுக்கை அடிப்பதை போன்று இருந்தாலும், இறைவனுக்கு  முன் இவர்களும் ஒரு நாள் பலியாகப்  போகிறவர்களே .......

  நவீன அலுவலர்களுக்காக  ஒரு நகைச்சுவையை ஒரு மாத இதழில் படித்தது நினைவுக்கு வருகிறது ....
                                                உயர்  அதிகாரி சொன்ன, 
                                                முட்டாள் தனமான 
                                                ஜோக்கிற்கு சிரிப்பவன் 
                                                 புத்திசாலி !


Thursday, 20 July 2017

சைவ சித்தாந்த நன்னெறி (Saiva sithantha Nanneri)

சைவ சித்தாந்த நன்னெறி - நூல் அறிமுகம் 




ஆசிரியர் :  சித்தாந்த செம்மணி , சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன் 


வெளியீடு : மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை , 
                         அம்மாபேட்டை ,    தஞ்சாவூர். 

கிடைக்குமிடம் : 
எனது பார்வையில் .....

              இந்த நூலைப்  படைத்திருக்கும் சைவத் திரு .சௌரிராஜன் அவர்கள், அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். உறைப்பான ஆன்மீகப் பற்றினாலும், தொண்டாலும் வாழ்வின் பெரும் பகுதியை இறைப்  பணிக்காக ஒதுக்கி வைத்தவர் .  ஆசிரியப்பணி  ஓய்விற்குப் பிறகு, முழுநேர இறைத்  தொண்டில் நிறைவு கண்டு வருபவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ சித்தாந்த பேராசிரியராக பணி செய்து வருபவர்.  திருவாசகம் முற்றோதல் மூலம் தமிழகம் அறிந்த       சிவ நேயர் . 

                         சைவ சித்தாந்தத்தின் ஒவ்வொரு பகுதியையும் முழுமையான ஆய்வு செய்து, எளிய நடைமுறை உதாரணங்கள் வழியாக, அரிய தத்துவங்களை, தொடர்ந்து தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் சிறப்பாக செய்து வருபவர். பதினான்கு சாத்திரங்களின் விரிவுரையை சுமார் 250 மணி நேரங்களுக்கு மேல் வழங்கியுள்ளார். அவை குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன.  யூ -ட்யூப் லும் பதிவேற்றப் பட்டுள்ளன.

                 இந்நூலில்    பதி , பசு , பாச இலக்கணங்களையும்  அதன் இயல்புகளையும் மிக எளிமையாக அனைவரும் விரைவில் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்யம் என்ற படி-நிலைகளையும், சிவப்பேறு அடைதலின் நோக்கம் மற்றும் மார்க்கம் குறித்தும் தன் இயல்பான நடையில் விரித்துரைத்துள்ளார்கள்.

             சைவ சித்தாந்தம் பல பல்கலைக்கழகங்களில் பட்டம் மற்றும் பட்டய பாடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இது மதம் சார்ந்த நூல் என்பதை விட இறைவனை அறிய, அடைய வழி  காட்டும் நூல்  என்று இயம்புவதே சாலச் சிறந்ததாக  இருக்கும். இளைய சமூகத்தினர் இது போல, மனதை செம்மைப் படுத்தும் தத்துவங்களை உள்ளடக்கிய நூல்களை பெற்று படித்து வந்தால் அதன் மூலம் உலகமும் மனித குலமும் உய்வு பெறும்.